கொல்கத்தா:
எதிர்பார்த்தபடியே மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் குண்டர்கள் வரலாறு காணாத கொடூர வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டனர். அதுதொடர்பான ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எனினும் தேசிய ஊடகங்கள், திரிணாமுல் குண்டர்கள் ஏவிய இந்த வன்முறை வெறியாட்டத்தை கட்சிகளுக்கு இடையிலான வெறும் மோதலாக வெளிப்படுத்தின.

மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் திங்களன்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும், கிட்டத்தட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பல நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளை துப்பாக்கி முனையில் அவர்கள் கைப்பற்றினார்கள். வாக்காளர்களை வெறிகொண்டு தாக்கினார்கள். ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வெளியேற்றினார்கள். பல கிராமங்களை ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர்கள் முற்றுகையிட்டனர்.கைப்பற்றிய வாக்குச்சாவடிகள் அனைத்தையும் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து வாக்குகளை பதிவு செய்தனர். எதிர்க்கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். எதிர்த்து நின்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு என பயங்கரங்களை அரங்கேற்றினர். ஏராளமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பெட்டிகளை கைப்பற்றிச் சென்றனர்.

திரிணாமுல் குண்டர்களின் வெறியாட்டம், தாக்குதல்களில் திங்களன்று மாலை 5 மணி வரை கிடைத்த விபரங்களின்படி 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

பஞ்சாயத்து தேர்தலையொட்டி எதிர்க்கட்சியினர் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுமுன்னணியினர் மீது ஞாயிறன்று நள்ளிரவு முதலே திரிணாமுல் குண்டர்கள் வன்முறையை துவக்கிவிட்டனர்.தெற்கு 24 பர்கானா மாவட்டம் நம்கானா ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் தேபுதாசையும், அவரது மனைவி உஷா தாசையும் குறிவைத்து கொடூரமாக தாக்குதல் நடத்திய குண்டர்கள், அவர்களை வீட்டிற்குள் வைத்துப் பூட்டி வீட்டோடு தீ வைத்து எரித்து படுகொலை செய்தனர். தோழர் தேபுதாஸ், திரிணாமுல் வேட்பாளரை எதிர்த்து பஞ்சாயத்து தேர்தலில் பிரச்சாரம் செய்ததால் தேர்தல் நடப்பதற்குள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஞாயிறன்று காலை திரிணாமுல் வேட்பாளர் மற்றும் அவரது சக குண்டர்களால் கடுமையாக மிரட்டப்பட்டிருந்தார். எனினும் அவர் துணிச்சலுடன் களத்தில் நின்றார். இந்தப் பின்னணியில் நள்ளிரவில் இருவரும் வீட்டோடு சேர்த்து எரித்து கொல்லப்பட்ட பயங்கரம் நடந்திருக்கிறது.

திங்களன்று காலை வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், வடக்கு 24 பர்கானா மாவட்டம் அம்தங்காவில் சிபிஎம் ஊழியர் தைபூர் ரஹ்மான் கெயின் (28), திரிணாமுல் குண்டர்களால் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்டார். கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் நந்திகிராமில் சிபிஎம் ஊழியர் ஜோகேஸ்வர் கோஷ், அபுமன்னா ஆகியோர் திரிணாமுல் குண்டர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

சிபிஎம் ஊழியர்கள் மட்டுமின்றி சில இடங்களில் காங்கிரஸ், பாஜக ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான சிபிஎம் ஊழியர்கள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகினர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ரத்தம் சிந்தப்பட்டது. பல இடங்களில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுசேர்ந்து திரிணாமுல் குண்டர்களை பதிலடி கொடுத்து விரட்டியடித்த சம்பவங்களும் நடந்தன.திரிணாமுல் வன்முறை தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் புகார்கள் அளித்துள்ளனர்.

கொல்கத்தாவில் திங்களன்று மாலை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சிபிஎம் தலைவர்கள் பிமன்பாசு, சூர்யகாந்த மிஸ்ரா தலைமையில் ஆவேசமிக்க கண்டனப் பேரணியும் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: