ஈரோடு,
ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கும் விழாக்களில் தொடர்ந்து ஆபாச நடனங்கள் இடம்பெறுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிறன்று ஈரோடு மாவட்டம் பவானியில் அரசு சார்பில் நடைபெற்ற காளிங்கராயனின் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்திருந்தார். இவ்விழாவில் முதல்வர் வருவதற்கு முன்பு பொதுமக்களை கூட்டுவதற்காக அரை, குறை ஆடைகளுடன் பெண்கள் பங்கேற்ற ஆபாச நடனம் நடைபெற்றது. ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்ற பல்வேறு விழாக்களில் இத்தகைய ஆபாச நடனங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, சில இடங்களில் நடன நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இருப்பினும் தொடர்ந்து இவ்வாறு ஆபாச நடனங்களை அரங்கேற்றுவதுடன், அதனை அரசு விழாக்களிலும் இடம்பெற செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply