பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவில் மூலவர் சன்னதியில் நவபாஷாண சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2004-ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் தங்கம் சேர்க்காமல் மோசடி செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு திடீரென மாற்றப்பட்டது. இதில் நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணையை தொடங்கினார். கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் சுகிசிவம் உள்ளிட்ட சில குருக்களிடம் 2-ஆம் கட்ட விசாரணை நடத்தினர். தொடர்ந்து பொன் மாணிக்கவேல், கூடுதல் எஸ்.பி. ராஜாராம், டி.எஸ்.பி. கருணாகரன் கொண்ட குழுவினர் 3-ஆம் கட்ட விசாரணையை தொடங்கினர். இவர்களுடன் சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல் துறை பேராசிரியர் முருகையா குழுவினரும் ஆய்வில் பங்கேற்றனர். கோவிலில் உள்ள உற்சவர் சிலைகளை ஆய்வு செய்து உலோகங்களின் அளவுகளை மதிப்பீடு செய்தனர். மலைக்கோவில் லாக்கரில் உள்ள ஐம்பொன் சிலை உள்ளிட்ட சிலைகளை 2 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் கடந்த 2004-ஆம் ஆண்டு பழனி கோவில் உதவி ஆணையராக இருந்த ஆயக்குடியைச் சேர்ந்த புகழேந்தி, அப்போதைய நகை மதிப்பீட்டாளரான தேவேந்திரன் ஆகியோரும் சிலை மோசடியில் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ஐம்பொன் சிலை செய்யப்பட்ட போது பழனி கோவிலில் புகழேந்தி உதவி ஆணையராகவும், தேவேந்திரன் நகை மதிப்பீட்டாளராகவும் இருந்துள்ளனர். பிறகு புகழேந்தி, திருத்தணி முருகன் கோவிலில் இணை ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். தேவேந்திரன் சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அவர்கள் இருவரிடமும் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தியதில் சிலை மோசடியில் சம்பந்தப்பட்டு இருப்பதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் சிலரிடமும் விசாரணை நடந்து வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.