சேலம்,
சேலம் மாவட்டத்தில் தொடரும் பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சிபிஎம் சேலம் மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழு கூட்டம் சனியன்று மாவட்டச் செயற்குழு உறுப்பின் டி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: சேலம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எடப்பாடி தொகுதி ஜலகண்டாபுரம் தோரமங்கலம் பகுதியில் கடந்த மாதம் எட்டு வயது மற்றும் ஏழு வயதுடைய இரு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும், இதே பகுதியில் மற்றொரு 7 வயது குழந்தை பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்கப்பட்டதுடன், அக்குழந்தையின் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து அவர் வைத்திருந்த பணம் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், காடையாம்பட்டி தாலுகாவில் 17 வயது சிறுமியை அவரின் உறவினரே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு சேலம் மாவட்டத்தில் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் சொந்த மாவட்டத்தில் இதுபோன்ற பாலியல் வன்முறை மற்றும் படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தனியார் கொள்ளைக்கு பசுமை சாலைமத்திய அரசின் திட்டமான பசுமை தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின்படி சேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் வசதிக்காகவும், சேலம்  கஞ்சமலை உள்ளிட்ட இயற்கை வளங்களை கனரக வாகனங்கள் மூலம் கொள்ளையடிப்பதற்காகவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு தேவையான இடம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளையும் கையகப்படுத்தி மேற்படி சாலை அமைக்கத்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே, எவ்வித காரணமுமின்றி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை பாதிக்காத வகையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இதேபோல், சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, நங்கவள்ளி, மேட்டூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சேலம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை இடித்துவிட்டு அங்கு வணிக வளாகம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.