கோத்தகிரி,
தாயகம் திரும்பியோரின் துயரம் தீர்க்க போராடும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து போராடுவோம் என கோத்தகிரியில் நடைபெற்ற தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை மாநாட்டில் கே.சாவேல்ராஜ் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோத்தகிரியில் தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை மாநாடு ஞாயிறன்று தாலுகா கமிட்டி செயலாளர் எம்.ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் கே.மகேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், தாயகம் திரும்பியோர் அமைப்புகளின் தலைவர்கள் சந்திரசேகரன்,தம்பிராஜா, செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றி பேசுகையில், இலங்கையிலிருந்து அரசாங்கத்தின் ஒப்பந்தங்களால் இந்தியாவிற்கு திரும்பியவர்களை தான் நாம் தாயகம் திரும்பியோர் என அழைக்கிறோம். 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் ஒரே உத்தரவின் மூலம் இவர்கள் நாடற்றவர்களாக மாற்றப்பட்டார்கள். பல தலைமுறைகளுக்கு முன்பாக இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வலுகட்டாயமாகவும், ஆசை வார்த்தைகளாலும் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அங்குள்ள தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு சென்றால் பசியற்ற வாழ்க்கை இருக்கும். தேயிலை தோட்டங்களில் பணியாற்றுகிறபோது தேங்காயும், கருவாடும் கேட்ட போதெல்லாம் கிடைக்கும் எனவும் சொல்லப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்கள். அங்கு மிக மிக துயரமான வாழ்க்கையை மேற்கொண்டாலும் கூட, அங்கு சென்ற இவர்களால் தான் அந்நாடு வளமாக மாறியது.

ஆனால், அரசியல் காரணங்களால் அவர்கள் மீண்டும் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். இப்படியாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதும், திருப்பி அனுப்பப்பட்டதும் விருப்பத்தின் பேரில் இல்லாமல் கட்டாயமாகவே நடைபெற்றது. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் இம்மக்கள் வசித்தாலும் கூட நீலகிரி மாவட்டத்தில் தான் மிக குவியலாக வாழ்கிறார்கள். இவர்கள் அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்டவர்களாக இருந்தபோதிலும் சமூக வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதிகள் சிலோன் காலனிகள் என அடையாளப்படுத்தப்படுகிறது.

நிலமற்றவர்களாகவும், வேலை வாய்ப்பற்றவர்களாகவும் வாழும் இவர்களின் வாழ்க்கை அவலமான நிலையில் உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவிற்கு வந்த பர்மா போர் அகதிகள், திபெத்திலிருந்து வந்துள்ள அகதிகளை விடவும் இலங்கையிலிருந்து திரும்பிய இவர்களின் வாழ்க்கை மிக மோசமாக இருப்பதற்கான முக்கிய காரணம் இவர்களில் 80 சதவிகித மக்கள் தலித்துகளாக இருப்பதுதான். சாதீயச் சமூகத்தின் இறுக்கமான அணுகுமுறை இவர்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியிலும் முன்னேற விடாமல் வைத்துள்ளது. அடிப்படை வசதிகளற்ற வாழ்விடங்கள், நிறைவேற்றப்படாத வாழ்வாதார கோரிக்கைகள் என நீடிக்கும் பிரச்சனைகள் யாவும் அரசியல் களத்தின் மையத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். அந்த முயற்சியின் துவக்கமாகத்தான் தாயகம் திரும்பியோரின் வாழ்வுரிமை மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது.

பிரதான அரசியல் கட்சிகள் இம்மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே பார்க்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே தாயகம் திரும்பியோரை மனிதர்களாக பார்க்கிறது. எனவே, தங்கள் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக தாயகம் திரும்பியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், பல்வேறு வெகுஜன அமைப்புகளின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான தாயகம் திரும்பியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.