கோவை,
தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் முறையிட்டனர்.

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி ஏழை, எளிய மாணவர்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 25 சதவிகித இலவச கல்வி வழங்க வேண்டும். ஆனால், இந்த உத்தரவை பல கல்வி நிறுவனங்கள் அமல்படுத்துவதில்லை. ஆகவே, இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்து நலிந்த பிரிவினருக்கு இலவச கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்த பிரிவில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி நன்கொடை, சிறப்பு வகுப்பு என பல்வேறு பெயர்களில் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதேபோல் மாணவர்களின் வருகை குறைவை காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை வகித்தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜய்குமார், பாலமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம்,வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாதர் சங்க மாவட்ட தலைவர் அமுதா, சிபிஎம் கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் தினேஷ்குமார், செயலாளர் கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரனை சந்தித்து மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: