கும்பகோணம்:
கும்பகோணத்தில் திங்களன்று நடைபெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் மற்றும் சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு உதயமானது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோயில், மடம், அறக்கட்டளை, தேவாலயங்கள், வக்போர்டு ஆகியவற்றிற்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்வோர், தரை வாடகை கொடுத்து குடியிருப்போர், வியாபாரம் செய்வோர் ஆகியோர் பங்கேற்ற மாநில சிறப்பு மாநாடு கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.மாநாட்டை இந்து அறநிலையத்துறை முன்னாள் இணை ஆணையர் ஜெயராமன் துவக்கிவைத்துப் பேசினார். சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்கபொதுச்செயலாளர் பெ.சண்முகம், பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில துணைத் தலைவர் பி.டெல்லிபாபு, எஸ். பொன்னுசாமி, முத்துராமு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். 

8 லட்சம் ஏக்கர் நிலம்
தமிழ்நாடு முழுவதும் கோயில், மடம், அறக்கட்டளை, வக்போர்டு மற்றும் தேவாலயங்களுக்கு சொந்தமான சுமார் எட்டு லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலங்களில் சாகுபடி செய்வோர், அடிமனை வாடகை செலுத்தி குடியிருப்போர், வியாபாரம் செய்வோர் என சுமார் பத்துலட்சம் பேர் தங்களின் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பலதலமுறைகளாக அடிமனை வாடகை செலுத்தியும் குத்தகை செலுத்தியும் வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்கள் கட்டியும் மின் இணைப்பு கூட கட்டிட உரிமையாளர் பெயரில் வாங்க முடியாத நிலைஇருக்கிறது.

சாகுபடி செய்யும் விவசாயிகளைப் பொருத்தவரை, குத்தகைதாரர்கள் பதிவு சட்டப்படி பதிவு செய்துள்ளோர், வாய்மொழி குத்தகை என இரண்டு பிரிவாக உள்ளனர். அவ்வப்போது குத்தகையை உயர்த்துவதும் குத்தகைக்குரிய காலத்தில் செலுத்தவில்லை என்று கூறி நில வெளியேற்றம் செய்வதும், வருவாய் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வெளியேற்றுவதும் போன்ற நடவடிக்கைகளில் மடாதிபதிகளும் இந்து அறநிலையத்துறையும் ஈடுபடுகின்றனர். இதனால் பாதுகாப்பற்ற நிலைமை தொடர்கிறது. எப்போது வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்துடனேயே வாழ வேண்டியுள்ளது.

எனவே கேரள மாநிலத்தைப் போல், சமய நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு நிலத்தை சொந்தமாக்கிட வேண்டும்; கிரயத் தொகையை நீண்ட தவணையில் பெற்று நிலை வைப்புத் தொகையாக வங்கியில் போட்டு உத்தரவாதப்படுத்தவேண்டும்; ஏழைகள், வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக நிலத்தை சொந்தமாக்கிட வேண்டும்; இதற்கான தொகையை அரசே சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் நில வெளியேற்றம் செய்யக்கூடாது; குடியிருப்போர், அடிமனை வாடகைதாரர்களுக்கும் கிரையத் தொகையை தவணை முறையில் பெற்றுக்கொண்டு சொந்தமாக்கிட வேண்டும்.

கோயில் நிலம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பின் அடிப்படையில் வாடகை உயர்த்துவது, முன்தேதியிட்டு உயர்த்திய தொகையை வசூல் செய்வது, நிலத்தை விட்டு வெளியேற்ற நோட்டீஸ் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அனைத்தையும் உடனடியாக நிறுத்தவேண்டும்; வறட்சி உள்ளிட்ட பல இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் குத்தகை மற்றும் வாடகை நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்யவேண்டும்.

கூட்டமைப்பு உதயம்
கோயில், மடம், அறக்கட்டளை, வக்போர்டு, தேவாலயம் ஆகியவற்றிற்கு சொந்தமான நிலங்களில் பயிரிடுவோர், அடிமனை வாடகைதாரர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்பேர் மற்றும் சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை துவக்குவது என்றும், மாநில அமைப்புக் குழுவிற்கு அமைப்பாளராக சாமி.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

கோரிக்கைகள் குறித்து தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து வற்புறுத்துவது என்றும் ஜூன் மாதத்தில் மாநிலம் முழுவதும் சென்னை, வேலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் என்.வி.கண்ணன் நன்றி தெரிவித்தார்
-(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.