கோவை,
உழவர் சந்தையில் விவசாயிகள் கடை அமைக்க அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு திரண்டு வந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கடை விரித்து காய்கறிகள் விற்பனை செய்யும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் கடை அமைத்து விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். சில விவசாயிகளை வேண்டுமென்றே அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர்.

ஆகவே, உழவர் சந்தையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும். விவசாயிகளை வெளியேற்றிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன்பின் அங்கிருந்த காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விவசாயிகள் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: