கோபி,
கீழ்பவானி வாய்காலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள மலைப்பாளையம் சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் தான்பணியாற்றும் பனியன் நிறுவன உரிமையாளர் திருமூர்த்தி உள்ளிட்ட 5 பேருடன் ஞாயிறன்று கூடக்கரை பகுதியில் செல்லும் கீழ்பவானிபிரதான வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர். இதன்பின் சில மணி நேரம் கழித்து கோவிந்தராஜன் தண்ணீரில் முழ்கிவிட்டதாக உடன் சென்றவர்கள் அவரது மனைவி ரேவதியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி மற்றும் உறவினர்கள் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து கோவிந்தராஜனை தேடியுள்ளனர்.

இந்நிலையில் திங்களன்று காலை செட்டிபாளையம் இரட்டை பாலம் என்னுமிடத்தில் கோவிந்தராஜின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க மருத்துவமனை ஊழியர்கள் முற்பட்டனர். ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து கோவிந்தராஜனின் மனைவி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோவிந்தராஜை கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க அழைத்துச் சென்ற திருமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் நான்குபேர் கோவிந்தராஜனை கொலை செய்து வாய்க்காலில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆகவே, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்திய கோபி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வம், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கோவிந்தராஜின் உடலை பெற்றுச் சென்றனர். இதனால் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: