ஈரோடு,
பவானிசாகர் அணையில் விதிகளுக்கு புறம்பாக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனை உடனே தடுத்த நிறுத்த வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 6 ஆவது ஈரோடு மாவட்ட மாநாடு ஈரோடு நசியனூர் பகுதியில் உள்ள கே.துரைசாமி, செ.விமலா நினைவரங்கத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ஆர்.மாணிக்கம் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி, மாவட்டச் செயலாளர் ஆர்.விஜயராகவன், மாவட்ட உதவித்தலைவர் எம்.நாச்சிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் வ.இளங்கோ, எஸ்.மாணிக்கம், எஸ்.சுப்பிரமணி, சி.சேகர், பழனிசாமி, ஈரோடு தாலுகா செயலாளர் என்.நாகராஜன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டில் சிறப்புரையாற்றிய சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவருமான எ.லாசர் பேசுகையில், ஈரோடு மாவட்டம் சுமார் 2.5 லட்சம் மக்கள்தொகை கொண்டதாக உள்ளது. இதில், அனைத்து விவசாய தொழிலாளர்களையும் சேர்ந்து 5 லட்சம் பேர் ஏழை எளிய விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். 143 கிராம பஞ்சாயத்துகளும், 44 பேரூராட்சிகளும், 225 ஊராட்சிகளும் உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் சட்டப்படியான கூலி, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டாவுடன் வீடு, ரேசன்கார்டுகள் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக வட்டாட்சியர் முதல் ஆட்சியர் வரை அனைவரையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால், தனியாக பார்த்தால் சரியான தீர்வு கிடைப்பதில்லை. சங்கத்தின் மூலமாகவும், போராட்டங்களின் மூலமாகவும் மட்டுமே நேரடியாக சந்தித்து பேசி தீர்வு காண முடியும். எதிர்கால வாழ்க்கையும் முன்னேற்றங்களை எதிர்பார்த்து உள்ளனர்.

பேரூராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றிக்கு காரணம் மத்தியில் உள்ள ஆட்சியாளர்களே ஆகும். போலி ஆட்சி செய்து வரும் மாநில அதிமுக அரசு மத்தியில் செயல்படும் பாஜக அரசுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு உள்ளது. இதனால் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாநிலத்தில் உள்ள பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை. இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இதனால் விவசாயிகளுக்கு இறப்பதை தவிர வேறு வழியில்லை. 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது ஆட்சியில் உள்ள இபிஎஸ் ஒபிஎஸ் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினோம்.

அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. திடுட்டு, களவாணிகளை சட்ட மன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சராகவும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துள்ளோம். இதனால் நமக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் தமிகழத்தில் 188 தனியார் பேருந்துகள் மேற்கு மண்டலத்தில் ஓடுகிறது. ஆனால், கூலித் தொழிலாளர்களை படும் கேவலமாக நடத்தி வருகிறார்கள். இந்நிலையை மாற்றி விவசாயத் தொழிலாளர்களுக்கான உரிமைகளை நமது சங்கத்தின் மூலமாக போராட்ட வாயிலாக வென்றெடுக்க வேண்டும்.இவ்வாரு அவர் பேசினார்.

தீர்மானங்கள்:
வீடுகள் இன்றி வாசித்து வரும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டாவுடன் வீடு வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவ மனைகளுக்கு உயர் சிகிச்சை வழங்கும் வகையில் பரிசோதனை கருவிகள், சிறப்பு மருத்துவர்கள், தரமான மருந்துகள் போன்றவற்றை வழங்க வேண்டும். பவானிசாகர் அணையில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் விதிகளுக்கு புறம்பாக 10 முதல் 20 அடிக்கும் மேலாக செம்மண், நைஸ் மணல் போன்ற இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது தடுக்கப்பட வேண்டும். ரேசன் கடைகளில் அனைத்து நாட்களிலும், அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனி நபர் ரேசன் கார்டுக்கு விண்ணபித்தவர்களுக்கு ரேசன் கார்டு வழங்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களுக்கு உயர்த்தி வழங்கியும், அதன் கூலியை ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணபித்த தகுதியானவர்களுக்கு உடனே வழங்க வேண்டும். அதன் தொகையை ஆயிரம் என்பதை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்:
முன்னதாக,இம்மாநாட்டில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.விஜயராகவன், செயலாளராக கே.சண்முகவள்ளி, பொருளாளராக என்.நாகராஜன், உதவித் தலைவர்களாக வி.ஆர்.மாணிக்கம், எஸ்.வி.மாரிமுத்து, உதவிச் செயலாளர்களாக எஸ்.மாணிக்கம், டி.சுப்பிரமணி மற்றும் 25 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துசாமி, ப.மாரிமுத்து, ஏ.எம்.முனுசாமி, பி.பி.பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.