திருவள்ளூர், 
விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருவள்ளூரில் சனிக்கிழமையன்று (மே 12) நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் இரா.சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.சண்முகம், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஜி. சின்னதுரை ஆகியோர் உட்பட மாநிலம் முழுவதிலுமிருந்து அனைத்துப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் கல்வி நிலையங்கள் திறக்கவுள்ள நிலையில், இனச்சான்று கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து பழங்குடியினருக்கும் விரைந்து வழங்கவேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளதை திரும்பப்பெற வேண்டும். இதற்காகத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக காத்திருக்கும் இருளர், காட்டு நாயக்கன், மலையாளி, குருமன்ஸ், கொண்டாரெட்டிஸ், மலைக்குறவன் போன்ற பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

திருப்பத்தூர் ஜவ்வாதுமலையில் உள்ள ஏகலைவன் உண்டு உறைவிடப் மேல்நிலைப்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றுவதைத் தடைசெய்ய வேண்டும், திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டத்தில் பழங்குடி இன மக்களுக்கு வழங்கிய இனச் சான்றிதழை தடுக்கும் வகையில் சில சாதிய அமைப்புக்களின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும். இதனை முறையாக விசாரித்து விடுபட்டவர்களுக்கும் இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலதீர்மானங்கள் இந்தகூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: