திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் சனியன்று பெய்த கன மழைக்கு நான்கு பேர் பலியாகினர். பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும்,பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

 திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இம் மரங்கள் மின்கம்பங்கள் மீதும் சாலையின் குறுக்காகவும் விழுந்தது. இதனால் மங்கலம் சாலை, வீரபாண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்ததிற்குள்ளகினர்.

மேலும்,மங்கலம் சாலை குள்ளேகவுண்டன்புதூரில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலை நெடுகிலும் நான்கு அடி அகலத்தில், 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மழை நீரில் தனியார் நிறுவன (கிளாசிக் போலோ) உரிமையாளர் சிவராமன் என்பவரது கார் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் மங்கலம் சாலையில் 1 மணி நேரத்திற்குமேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பல்லடம்:
பல்லடம் பேருந்துநிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த கட்டணக்கழிப்பறை பலத்த மழையின் காரணமாக மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.அப்போது உள்ளே இருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர் .இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் தீயணைப்புத்துறையினர் சுமார் ஒருமணிநேரம் போராடி இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இச்சம்பவத்தில் பல்லடம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அசோக்குமார் (40) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும், வெங்கடாச்சலம் (28) என்பவர் படுகாயமடைந்தார்.இதையடுத்து காயமடைந்த வெங்கடாச்சலத்தை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த அசோக்குமாரின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனர். அதே போல் உடுமலை சாலையில் உள்ள வடுகபாளையம் புதூர் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்து ஈஸ்வரன் (வயது 49), பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல வீரபாண்டி பகுதியில் ஆவின் பாலக காவலர் சௌந்தரசீலன் என்ற முதியவர் மழையால் அறுந்து விழுந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உ.வாசுகி நேரில் ஆறுதல்;
அதேபோல் சீராணம்பாளையத்தில் மழை காரணமாக மரம் முறிந்து வீட்டின் மேற்கூரையில் விழுந்து ஓடுகள் உடைந்து, சமையல் செய்து கொண்டிருந்த தெய்வாத்தாள் (வயது 68) என்கிற மூதாட்டி உயிரிழந்தார். இதையரிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி நேரில் சென்று, அவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும், மாநிலக் குழு உறுப்பினர் கே.காம்ராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தெற்கு ஒன்றிய குழுச் செயலாளர் சி.மூர்த்தி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் கணேசன், சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் வை.ஆனந்தன்,கிளை செயலாளர்கள் ஈஸ்வரன், கருப்புச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.