தஞ்சாவூர்,
தஞ்சையில் சாலையோரம் ஜல்லி ஏற்றி நின்ற லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயத்துடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர், புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (27), லாரி உரிமையாளர். இவரது மனைவி சரண்யா (24), இவர்களது மகள் தனுஸ்ரீ (3), விஜயகுமார் குடும்பத்தோடு தஞ்சை அருகே கீழவஸ்தாச்சாவடியில் உள்ள தனது மாமனார் தட்சிணாமூர்த்தி (55) வீட்டில் வசித்து வந்தார்.  3 தினங்களுக்கு முன்பு விஜயகுமார், மனைவி சரண்யா, மகள் தனுஸ்ரீ, மாமனார் தட்சிணாமூர்த்தி, மாமியார் உமாராணி (50), சரண்யாவின் அக்கா இந்துமதியின் குழந்தைகள் ஸ்ரீவர்ஷா (12), சாய்வர்ஷினி(10), ஓட்டுநர் ஆகிய 8 பேருடன் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு காரில் சென்றிருந்தார்.

கீழவஸ்தாச்சாவடியைச் சேர்ந்த அரவிந்த் (27), காரை ஓட்டினார். திருச்செந்தூரில் தரிசனம் முடித்தபின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி வழியாக தஞ்சை வந்தனர். திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை விளார் பிரிவு சாலை அருகே ஞாயிறு அதிகாலை வந்தபோது கரூரில் இருந்து கும்பகோணம் செல்வதற்காக ஜல்லி ஏற்றி சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியது. இதில் தட்சிணாமூர்த்தி, விஜயகுமார், தனுஸ்ரீ, ஓட்டுநர் அரவிந்த் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்தகாயம் அடைந்த சரண்யா, சாய்வர்ஷினி, ஸ்ரீவர்ஷா, உமாராணி ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் செல்லும் வழியில் சரண்யாஇறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. சாய்வர்ஷினி, ஸ்ரீவர்ஷா, உமாராணி ஆகிய 3 பேருக்கும் டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: