கோவை,
மார்க்ஸ் ஒருவர்தான் கனவுகளின் உலகத்தில் அறிவியலை நிறுத்தினார். சோசலிசம் எவ்வாறு மெய்ப்படும் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிறுவிக்காட்டினார் என கோவை கருத்தரங்கில் தியாகு உரையாற்றினார்.

சங்கமம் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட காரல் மார்க்ஸின் 200 வது ஆண்டு நிறைவு விழா கருத்தரங்கம் கோவை, வேலாண்டிபாளையம் வி.ஆர்.கே. மண்டபத்தில் நடை பெற்றது. இதற்கு கவிஞர் கே.எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்று எழுத்தாளரும், செயல்பாட்டாளருமான தியாகு பேசுகையில், மார்க்ஸ் காலத்திலும் அதற்கு முன்னரும் சோசலிசம் குறித்து கனவுகள் இருந்தது. ஆனால் அந்த கனவுகள் எவ்வாறு மெய்ப்படும் என்பது குறித்து அவர்களால் கூறமுடியவில்லை.

திருவள்ளுவர், கம்பர், பாரதி போன்றவர்கள் இந்தியாவிலும், ஐரோப்பாவில் பல அறிஞர்களும் இத்தகைய கனவுகளைக் கண்டார்கள். கனவு கண்ட பாதிரிமார்களும் சன்யாசிகளும் உண்டு. ஆனால் மார்க்ஸ் ஒருவர்தான் கனவுகளின் உலகத்தில் அறிவியலை நிறுத்தினார். சோசலிசம் எவ்வாறு மெய்ப்படும் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிறுவிக்காட்டினார். மார்க்ஸின் வாழ்க்கை இலக்கியம் சார்ந்த வாழ்க்கையாக இருந்தது. அவர் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். சட்டம் மெய்யியல், பொருளியல் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். ஒற்றை அடைமொழியில் ஆவாரை அழைக்கவேண்டுமானால். “புரட்சியாளர் காரல் மார்க்ஸ் “ எங்கல்ஸ் அவரை அப்படித்தான் கூறினார். ரஷ்யாவில் புரட்சி தோற்ற பிறகு மார்க்ஸிசம் இனி உலகை வழி நடத்துமா? என்ற கேள்வி எழுப்பட்டது. மார்க்சே பிறந்திருக்கா விட்டாலும் மார்சிசம் பிறந்திருக்கும். அது வேண்டுமானால் வேறு பெயரில் அழைக்கப்பட்டு இருக்கலாம். ஏன் என்றால் அது வரலாற்று இயக்கப் போக்கின் படைப்பு. வரலாறுதான் வரலாற்று மாந்தர்களை உருவாக்குகிறது.

மாந்தர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை. முதலியத்தில் ஒருமனிதன் சுரண்டலில் இருந்து விடுதலை பெறமுடியாதா? என்ற கேள்வியும் உள்ளது. முதலியத்தில் தொழிலாளியாக இருக்கிற ஒருவன், சுரண்டலில் இருந்து விடுபட்டு சிறு முதலி ஆகலாம். ஆனால் இவன் சுரண்டலை விடமாட்டான். எனவே, பாட்டாளி பாட்டாளியாவே விடுதலை பெறவேண்டுமானால் அது சோசலிசத்தில் மட்டும்தான் முடியும். மார்க்ஸ் அஞ்சாமையை தனது அறமாகவே கொண்டு வாழ்ந்தார். அவருக்கு எங்கல்ஸ் தன்னலம் கருதாத உதவிகளை செய்தார். என்றும் அவர் கூறினார். இந்த விழாவில் சங்கமம் ஒருங்கிணைப்பாளர் எல்.ஜான், வில்வம், ஜீவபாரதி, அசரப் அலி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.