ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வை சனியன்று நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கூறியதாவது :- தமிழக அரசு மாவட்டம்தோறும் சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டும், விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிடவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்ட அளவில் குழுக்களை அமைத்து சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி சாலைப் பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஒட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஆய்வு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 405 பள்ளி வாகனங்களும் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை இந்த மைதானத்திலும், கோபிச்செட்டிபாளையம் அலுவலக எல்லைக்குட்பட்ட வாகனங்களை அந்தப் பகுதியில் உள்ள மைதானத்திலும், பெருந்துறை அலுவலக எல்கைக்குட்பட்ட வாகனங்கள் அப்பகுதியிலுள்ள மைதானத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு, மேற்கு வட்டாரபோக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட 438 பள்ளி வாகனங்களும், கோபி பகுதி அலுவலக எல்லைக்குட்பட்ட 490 பள்ளி வாகனங்களும் மற்றும் பெருந்துறை பகுதி அலுவலக எல்லைக்குட்பட்ட 477 பள்ளி வாகனங்களும் என மொத்தம் ஆயிரத்து 405 பள்ளி வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச் சான்று, அனுமதிச்சீட்டு, ஒட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், வேகக் கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, தீயணைப்பு கருவி, சிறப்பு படிக்கட்டு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. எனவே, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளி நிர்வாகமும் மேற்கண்ட பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி ஈரோட்டை சாலை விபத்து இல்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகர் தெரிவித்தார்.

இத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினருடன் இணைந்து நடத்திய தீத்தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான கள ஒத்திகைப் பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகன ஒட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார், துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து இணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்ணன், ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.