ஈரோடு,
பராமரிப்பு இன்றி இருக்கும் வீடுகளில் கிடக்கும் பொருள்களுக்கு அபராதம் வசூலிப்பது போன்ற ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி தற்போது மத்திய அரசால் ரூ.400 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், காலியிடங்கள் போன்றவற்றில் பராமரிப்பு இன்றி கழிவு நீர் தேங்குதல், தேங்காய் மட்டைகள், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போன்ற பொருள்கள் கிடந்தால் நேரடியாக நிலத்தின் உரிமையாளருக்கு ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுபொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- ஈரோடு மாநகராட்சியில் போதுமான அளவு துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பல வார்டுகளில் தேங்கும் குப்பைகளே முறையாக அல்லப்படுவதில்லை. சாக்கடை கழிவுநீர்கள் உடனுக்குடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால் மாநகரமே சுகாதார சீர்கேட்டு மையமாகத்தான் இருந்து வருகிறது. இவ்வாறு மாநகராட்சி நிர்வாக முறையான சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளாத நிலையில், பராமரிப்பு இல்லாத வீடுகளைக் கண்டறிந்து அபராதம் விதித்து அராஜகமான முறையில் வசூலித்து வருவது தவறான நடவடிக்கையாகும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: