புதுதில்லி:
மூலதனப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி மற்றும், சுரங்க உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பானது, தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியையும் கடுமையாக பாதித்துள்ளது.
2017-18 நிதியாண்டில் தொழில்துறை உற்பத்திக் குறியீடு 4.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, முந்தைய ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 2018 மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சரிவைச் சந்தித்துள்ளது.

2018 மார்ச் மாதத்தில் சுரங்க உற்பத்தி 2.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஆனால் 2017 மார்ச் மாதத்தில் சுரங்க உற்பத்தி வளர்ச்சி 10.1 விழுக்காடாக இருந்தது முக்கியமானது. மின்சார உற்பத்தியும் 2017 மார்ச் மாதத்தில் 6.2 விழுக்காட்டில் இருந்து 2018 மார்ச் மாதத்தில் 5.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 2017 மார்ச் மாதத்தில் 9.4 விழுக்காட்டில் இருந்து 2018 மார்ச் மாதத்தில் 1.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது.தொழில் துறை உற்பத்திக் குறியீட்டின் அடிப்படையில்தான் தொழில்துறை வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில், தொழில்துறை உற்பத்திக் குறியீடு 2016-17ஆம் நிதியாண்டில் 4.6 விழுக்காடாக இருந்தது. ஆனால், அதுவே 2017-18ஆம் நிதியாண்டில் 4.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

2017 மார்ச் மாதத்தை எடுத்துக கொண்டால், தொழில்துறை உற்பத்திக் குறியீடு 4.4 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2018 மார்ச் மாதத்துக்கு முந்தைய நான்கு மாதங்களிலும் கூட தொழில்துறை உற்பத்தி சராசரியாக 7 விழுக்காடு விகிதத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில் 4.3 விழுக்காடாக குறைந்துள்ளது.

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டில், உற்பத்தித் துறை மட்டும் 77 விழுக்காடு பங்கைக் கொண்டிருக்கிறது. அந்த உற்பத்தித் துறை கடந்த மார்ச் மாதத்தில் 4.4 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.தொழிற்சாலைகளின் அடிப்படையில், 2018 மார்ச் மாதத்தில் உற்பத்தித் துறையில் 23 தொழில் குழுமங்களில் 11 குழுமங்கள் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மொத்தமாகக் கடந்த நிதியாண்டில் உற்பத்தித் துறை எடுத்துக் கொண்டால், 4.5 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.