சென்னை:
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்களுக்கான சேர்க்கை குறித்த தமிழ்நாடு சட்டம், 2017 மற்றும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த தமிழ்நாடு சட்டம், 2017- ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவதற்கு – விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் கீழ்க்கண்ட விஷயங்களை உங்கள் முன்வைக்கவும், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரவும் இக்கடிதத்தின் மூலம் விழைகிறேன்:

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த தமிழ்நாடு சட்டம் 2017 மற்றும் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ மேற்படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த தமிழ்நாடு சட்டம் 2017 – ஆகிய இரு மசோதாக்களும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றிட குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவரின் முன்பாக இந்த சட்டங்களைக் கொண்டு செல்லாமல் காலந்தாழ்த்தி வருவது என்பது தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்பாராத வகையில் நீட் தேர்வு தயாரிப்பு மையங்களுக்கு பெருந்தொகை செலவிட வேண்டியுள்ளது.

தமிழக மாணவர்கள் சி.பி.எஸ்.இ.யின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், சிரமங்கள் மற்றும் தொந்தரவுகளுக்கு மத்தியிலும் இந்த தேர்வினை எழுத வேண்டியிருந்தது. குறிப்பாக கிராமப்புற மாவட்டங்களைச் சார்ந்த மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சார்ந்த மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவர்கள் முன்னெப்போதுமில்லாத பல்வேறு துயரங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த பின்னணியில் இந்த மசோதாவை சட்டமாக்கிடுவது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசு இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் முன் வைக்காமல் காலந் தாழ்த்தி வருவது மாணவர் சமுதாயம் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய காரணங்களால் கீழ்க்கண்ட விபரங்களை தங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

குடியரசுத் தலைவர் அலுவலக பதில் கடிதம்
1. மேதகு குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட மேற்குறிப்பிட்ட கடிதம் தமிழ்நாடு சட்டமன்றத்தால் மேற்கூறிய இரண்டு சட்ட மசோதாக்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, மேதகு தமிழ்நாடு மாநில ஆளுநர் மூலமாக மேதகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவை மேதகு குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில் இதுவரை பெறப்படாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை உரிய நடவடிக்கைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்திருந்தது.

2. இதுவரை அமைக்கப்பட்ட நீதிபதிகளின் அமர்விலேயே மிகப் பெரியதான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமைப்புச் சட்ட விஷயங்கள் குறித்த அமர்வு மாடர்ன் டெண்டல் காலேஜ் வழக்கில் 2016 மே 2ஆம் நாளன்று வழங்கிய தீர்ப்புரையில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 254வது பிரிவு குறித்து விரிவாகச் சுட்டிக் காட்டியிருந்தது. அந்தத் தீர்ப்புரை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:
சமமான வாய்ப்பை மாநில அரசே வழங்க முடியும்

“மத்திய அரசின் சட்டவிதிகளின் கீழ் ‘நீட்’ என்றழைக்கப்படும் பொது நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிக்கை செயல்பாட்டிற்கு வந்தபிறகு, அது மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஒரு விஷயமாக மாறி விடுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 254வது பிரிவின் அடிப்படையிலேயே அதை உரசிப் பார்க்க வேண்டும். இந்த அம்சத்தை இதற்கு மேலாக நாம் எளிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.” பாரா. 98
உண்மையில், ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசின் நேரடி நிதியுதவியுடன் செயல்படும் நிறுவனங்களின் நிர்வாகத்தைத் தவிர, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் சேர்க்கை, கட்டணம் போன்ற நடைமுறைகள் குறித்த வரையறுப்புகளை செய்வதற்கான ஒரே அமைப்பு அந்தந்த மாநில அரசாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட அந்த மாநிலத்தின் மக்களின் தேவைகள், ஏற்றத்தாழ்வுகள், வாய்ப்பின்மை ஆகியவற்றை அந்த மாநில அரசைத் தவிர வேறு எவராலும் மதிப்பிடுவதற்கு இயலாது. மாநில கல்வித் திட்டம் மற்றும் இதர கல்வித் திட்டங்கள் மூலம் படித்துவிட்டு வரும் மாணவர்களிடையே சமமான வாய்ப்பை மாநில அரசு இதற்கென உருவாக்கும் சட்டத்தினால் மட்டுமே வழங்க முடியும். பாரா 30
                                             – உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி

3. மூன்றாவது பட்டியலில் (பொதுப்பட்டியலில்) வரிசை எண் 25-இன் கீழ் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான உரிமை மாநில சட்டமன்றத்திற்கு உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்பதை மேற்குறித்த தீர்ப்புரையை உற்றுப் படிக்கையில் மிகத் தெளிவாகத் தெரியவருகிறது.

தேவையற்ற 15 மாத காலதாமதம்

4. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைப்பது என்பது மத்திய அரசின் அரசியல் அமைப்புச் சட்டப்பூர்வமான கடமை ஆகும். உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் எந்தவித தடையையும் விதிக்கவில்லை.

5. இவ்வகையில் 18.02.2017 அன்று மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 254(2) பிரிவின் கீழ் இந்த இரு மசோதாக்களையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைத்தார்.

6. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மேற்கண்ட இரு மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதில் தேவையற்ற, விளக்கமேதுமற்ற 15 மாத கால தாமதம் செய்துள்ளது.

மத்திய – மாநில உறவுகள் கமிஷன் கூறுவதென்ன?

7. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு. மதன் மோகன் புன்ச்சி தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உறவுகளுக்கான கமிஷன் கீழ்க்கண்டவாறு பரிந்துரைத்திருந்தது:

“11.4 குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் குறித்து
11.4.01 குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் எந்தவொரு மசோதாவையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்ளவோ அல்லது அனுமதி வழங்க மறுக்கவோ அரசியல் அமைப்புச் சட்டத்தின் 201வது பிரிவு அவருக்கு அதிகாரம் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் எந்தவொரு தகவலுடனும் அந்த மசோதாவை திருப்பி அனுப்பினால், அதற்கேற்ப மாநில சட்டமன்றம் ஆறுமாத காலத்திற்குள் அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்து மீண்டும் பரிசீலனைக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். (பாரா 3.6.02) 11.4.02 இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் சில நேரங்களில் அவ்வாறு அனுப்பி வைத்த சட்டமன்றத்தின் ஆயுள் காலத்திற்கு அப்பாலும் கூட காலவரையறையின்றி மத்திய அரசு மட்டத்தில் நிறுத்தி வைக்கப்படுவது குறித்து மாநிலங்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியிருந்தன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் ‘அடிப்படை அம்சங்களின்’ பின்னணியில் பார்க்கும்போது மாநில சட்டமன்றத்தின் ஜனநாயகப்பூர்வமான விருப்பமானது நிர்வாகத்துறையில் கட்டளையால் தடுக்கப்படுவதை அனுமதிப்பது கேள்விக்குரியதொரு விஷயமாகும். எனவே நியாயமானதொரு காலவரம்பிற்குள் அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது அல்லது ஒப்புதல் வழங்க மறுக்கப்பட்டது என்ற தகவல் மாநில அரசுக்கு தெரிவிக்கப்படவேண்டும்.இந்தக் கமிஷனின் கண்ணோட்டத்தில், குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் மாநில சட்டமன்றம் ஆறுமாத கால வரம்பிற்குள் அந்த மசோதாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் 201வது பிரிவின் வரையறுப்பினை தனது ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எந்தவொரு மசோதாவிற்கும் ஒப்புதல் அளிப்பது அல்லது ஒப்புதல் அளிக்க மறுப்பது என்பதை குடியரசு தலைவர் முடிவு செய்வதற்கும் பொருந்துமாறு செய்ய வேண்டும் என்பதே ஆகும். (பாரா 3.6.03)

8. 2016 ஜூலை 16 அன்று நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தில் இந்தக் கமிஷனின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்டு பல மாநிலங்களின் முதல்வர்களும் இந்தப் பரிந்துரையை வரவேற்றுப் பேசினர்.
மாநிலத்தின் விருப்பம் பற்றி நிலைக்குழு கூறுவதென்ன?

9. சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் குறித்த துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு தனது 92வது அறிக்கையில் கீழ்க்கண்டவாறு பரிந்துரை செய்திருந்தது:
“மருத்துவக் கல்விக்கான பொதுத் தேர்வின் வரம்பிலிருந்து வெளியே இருக்க விரும்பும் மாநிலங்களை தவிர, நாடு முழுவதிலும் மருத்துவக் கல்விக்கான பொதுத் தேர்வை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்கிறது.”

10. 2006ஆம் ஆண்டில் தொழில்முறைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமானது. (2006ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்ட எண் 39) என்ற இந்தச் சட்டம் சரியானதென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2011 மார்ச் மாதத்தில் உச்சநீதி மன்றமும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதென்று உறுதிப்படுத்தியது.

11. தொழில்முறைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து இயற்றப்பட்ட 2006ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்ட எண் 39-ஐ சரியானதெனத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்புரையில் இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றின் அறிவிப்புகளையும் கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருந்தது:

12. மனித வளத்துறை அமைச்சகத்தின் அலுவலக விவரக் குறிப்பு எண். எஃப். எண். 17-2/2007- டி.எஸ்.ஐ நாள்: பிப்ரவரி 15, 2007 கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:
“திட்டமிடப்பட்டுள்ள மசோதா அரசியல் அமைப்புச் சட்டரீதியாக ஏற்புடையதே ஆகும். ஏனெனில் பொதுப்பட்டியலின் வரிசை எண் 25-இன் கீழ் இது அடங்குகிறது. திட்டமிட்ட மசோதா தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வியின் தரங்களை நீர்த்துப் போகவோ அல்லது தரந்தாழ்த்தவோ செய்யாத நிலையில் மத்திய அரசுப் பட்டியலின் வரிசை எண் 66 உடன் இது முரண்படவில்லை.”

13. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அலுவலக விவரக் குறிப்பு எண். வி.11012/2006-எம்.5.பி(1) நாள்: ஜனவரி 25, 2007 கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:
“ஒரு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கு மட்டுமே இது பொருந்தும் என்ற நிலையில் மத்திய அரசின் சட்டத்திற்கோ அல்லது கொள்கைக்கோ இந்த மசோதா ஒரு தடையாக இருக்காது.”

மக்களின் விருப்பத்தை மறுதலிக்க முடியாது

14. இவற்றின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்புரை கீழ்க்கண்டவாறு முடிவடைந்திருந்தது: “அதிகாரம்/உரிமை/பயன்கள் ஆகியவற்றை சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதுகெலும்பாகும். எனவே:

(i) வாழு.. மற்றவர்களையும் வாழவிடு..

(ii) தகுதி/திறமையை சற்றே தாழ்த்தி, சமூகரீதியாகவும், பிற்படுத்தப்பட்ட நிலையிலும் உள்ள மாணவர்களின் தரத்திற்கு அதைச் சமப்படுத்தி, சிறப்பான தளத்திற்கான இருக்கைகளை அவர்களுக்கிடையே பகிந்து கொள்வது.

(iii) 2006ஆம் ஆண்டின் 39 வது சட்டத்தை செல்லாததாக ஆக்குவதன் மூலம் பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்ற கோடிக்கணக்கான மக்களின் விருப்பத்தை மறுதலிக்க முடியாது. மாறாக, அவர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் இவை என்றே நான் கருதும் நிலையில், மேற்கூறிய கருத்துக்களை சட்டப்பூர்வமானதென்று நான் தீர்ப்பளிக்கிறேன்.”

தரம், தகுதி குறித்த புகாரில்லை

15. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இருக்கைகள் ஆகியவற்றுக்கான சேர்க்கை உயர்நிலைப் பள்ளித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் என்ற வகையில் வெளிப்படையான சேர்க்கை முறையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரியில் கட்டணம் என்பது சுமார் ரூ. 20,000/- என்பதாக இருந்தது. மேலும் சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கென பல்வேறு கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன.

16. தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் சேர்க்கை முறையில் பட்டம் பெற்ற மாணவர்களின் தரம் அல்லது தகுதி குறித்து இன்றுவரையில் எந்தவித புகாரும் இல்லை என்பதோடு, அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த மருத்துவமனைகளில் அவர்கள் சேவை செய்தும் வருகின்றனர்.
அறிஞர்கள் பாராட்டும் நடைமுறை

17. இத்தருணத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென், ழீன் ட்ரேஸ் ஆகியோர் இணைந்து எழுதிய “நிச்சயமற்ற பெருமை- இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்” என்ற நூலில் மருத்துவ சேவைகள் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக விரிவான அளவில் கிடைப்பது குறித்து எழுதியிருந்த பாராட்டுக் கருத்துக்களை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். (இணைப்பைக் காண்க). இத்தகைய பாராட்டத்தக்க செயலின் முதுகெலும்பாக விளங்குவது கல்வியில், குறிப்பாக மருத்துவக் கல்வியில், சமூகநீதியை நிலைநாட்டுவது என்ற மாநில அரசின் இலக்குதான் என்பதை மேலே விவரிக்கப்பட்ட நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

18. மேற்படிப்பிற்கான சேர்க்கையைப் பொறுத்தவரையில் “பணியில் இருப்பவர்களுக்கான ஒதுக்கீடு” என்று இதுவரை இருந்து வந்த மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை ‘நீட்’ தேர்வின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிறியதொரு ஊக்கமளிப்பே …

19. ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மருத்துவமனைகள், பொது மருத்துவமனைகள் உள்ளிட்டு அனைத்து மட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் தகுதிபெற்ற மருத்துவர்கள் பணிபுரிய முன்வருவதற்கான சிறியதொரு ஊக்கமளிப்பாகவே மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் “பணியில் இருப்பவர்களுக்கான ஒதுக்கீடு என்பது இருந்து வந்தது. மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளிலும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளிலும் கூட தகுதிபெற்ற மருத்துவர்கள் பணிபுரிவதை இந்த ஊக்கமளிப்பு உறுதிப்படுத்தி வந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

20. மருத்துவ பட்டமேற்படிப்பில் இத்தகைய ஊக்கமளிப்பு ஏதுமில்லாத நிலையில் இத்தகைய மருத்துவர்களின் சேவையை உறுதிப்படுத்த இயலாத நிலை உருவாகும். இது பல்லாண்டுக் கால முயற்சியில் இந்த மாநிலத்தில் வலுவாக உள்ள பொது மக்களுக்கான மருத்துவ சேவை என்ற அமைப்பு மெதுவாக அழிந்து போகவே வழிவகுக்கும்.

அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும்

21. தனியார் நிறுவனங்கள் இத்தகைய பொது மக்களுக்கான மருத்துவ சேவை அமைப்பின் இடத்தைப் பிடித்துக் கொள்ளும். வருமானம் ஏதுமில்லாத அல்லது வாய்க்கும் கைக்கும் சண்டை போடுமளவிற்கு மிகக் குறைவான வருவாயில் வாழ்ந்து வரும் மக்கள் கண்ணியமான வகையில் மருத்துவ வசதியைப் பெற இயலாத நிலை உருவாகும். இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21வது பிரிவுகளின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மறுப்பதாகவே அமையும்.

22. மாநிலத்தின் நலனையும், அதன் மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு சட்டங்களை இயற்றுவதற்கான மாநில அரசுகளின் உரிமைகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மூன்றாவது பட்டியலின் வரிசை எண் 25 உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

23. இதன் அடிப்படையிலேயே தமிழ்நாடு சட்டமன்றம் மேற்கூறிய இரண்டு மசோதாக்களையும் ஏகமனதாக நிறைவேற்றியிருந்தது. இது மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பதாகவும் இருந்தது.

24. மாநிலத்திலுள்ள மக்களின் நலன்களைக் காப்பதற்காக சட்டங்களை இயற்றுவதற்கான உரிமையை மாநில சட்டமன்றங்களுக்கு வழங்கியுள்ள இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்களை கருத்தில் கொண்டு, மேற்கூறிய இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசு உடனடியாக குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து, மிக விரைவில் அவை சட்டமாகச் செயல்படும் வகையில் அவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இணைப்பு
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்தியா சென், ழீன் ட்ரேஸ் ஆகியோர் எழுதிய “நிச்சயமற்ற பெருமை – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்” என்ற நூலில் தமிழ்நாடு குறித்து வெளியிட்டிருந்த கருத்துக்கள்

பல பொருளாதார நிபுணர்களும் இதைப் பற்றி திகைப்பில் ஆழ்ந்த போதிலும் கூட, இந்தக் காலப்பகுதியில் துவக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு, பள்ளிகள், சுகாதார மையங்கள், சாலைகள், போக்குவரத்து, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற இன்னும் ஏராளமான சமூகக் கட்டமைப்பை பிரிவான வகையில் வழங்கும் சமூகநலத் திட்டங்களை தமிழ்நாடு மிகத் துணிவோடு துவக்கியிருந்தது….

இன்று இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் மிகச் சிறந்த பொதுமக்களுக்கான சேவைகள் சிலவற்றை வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தச் சேவைகளில் பலவும் மக்கள் அனைவரும் எளிதாக அணுக முடிவது மட்டுமின்றி அவை பாரபட்சமற்ற வகையிலும் வழங்கப்படுகிறது….

உண்மையைச் சொல்வதானால், இத்தகைய அத்தியாவசிய சேவைகள், வசதிகள் ஆகியவை அனைவருக்கும் கிடைக்கின்றன என்பதோடு, அவை இலவசமாகவும் கிடைக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்….

வெற்றிகரமான இந்த முயற்சிகளின் கதாநாயகர்களாக விளங்குவது சிறப்பாகச் செயல்படும் பள்ளிகள், சுகாதார மையங்கள், அரசு அலுவலகங்கள், கிராமப் பஞ்சாயத்துகள், கூட்டுறவு அமைப்புகள் போன்ற ‘பத்தாம்பசலி’யான பொது நிறுவனங்கள்தான். மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு திட்டமும் மிகத் துரிதமாக முன்னேறுவதற்கான அடித்தளத்தை உருவாக்கியவை இந்தப் பொது அமைப்புகள்தான்….

மருத்துவசேவையில் உறுதிப்பாடு
அனைவருக்கும் இலவச மருத்துவ வசதிகள் வழங்குவதில், பிற மாநிலங்களைப் போல் இல்லாமல், தமிழ்நாடு மிகத் தெளிவான உறுதிப்பாடு கொண்டுள்ளது. எப்படியாவது அனைத்து வகையான மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்பதில் இல்லாவிட்டாலும், பலவிதமான மருத்துவ வசதி மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஓர் உறுதிப்பாடு உள்ளது. சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்ல; பிற மாநிலங்களைக் காட்டிலும் அத்தகைய சேவைகள் மூலம் சிறந்த மருத்துவ அடைவுகளைப் பெறுவதிலும் தமிழ்நாட்டின் உறுதிப்பாடு தெளிவாகிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்தத் துறையில் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது என்பதை மட்டுமல்ல; செயலூக்கமிக்க, படைப்பூக்கமிக்க அனைவரையும் உள்ளடக்கிய சமூகக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இந்த வெற்றிகள் அமைந்துள்ளன என்பதையும் சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன….

இந்தியாவில் பல பகுதிகளில் மருத்துவ அடிப்படைகள் பலவும் புறந்தள்ளப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் அவற்றின் மீது கவனம் செலுத்தப்படுகிறது. உதாரணமாக, நோயை வருமுன் தடுக்கும் நோக்கத்தோடு எடுக்கப்படும் பொதுசுகாதார நடவடிக்கைகள் மீது நிலைத்த கவனம் செலுத்தப்படுகிறது. 2005-6ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களை விட அதிகமாக தமிழ்நாட்டில் 80 சதவீதத்திற்கும் கூடுதலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைப் போல, அரசு மருத்துவமனைகளுக்கு குறித்த நேரத்தில் இலவச மருந்துகளை வழங்குவதற்காக ‘மருந்துக் குழுமம்’ (Pharmaceutical Corporation) ஒன்றை தமிழ்நாடு உருவாக்கியது. இதன் மூலம் கணினிப் பதிவுகளுடன் கூடிய, சிறப்பாக மருந்துகளை விநியோகிக்கும் முறையையும் உருவாக்கியது. பிற மாநிலங்கள் பலவற்றிலும் இதற்கு நேர் எதிரான சூழ்நிலையே நிலவுகிறது…..

பொதுச் சேவைகளை சிறப்பாக வழங்குவதற்கான உறுதிப்பாட்டை தமிழ்நாடு எப்போது, எப்படி பெற்றது என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விளக்கங்கள் பலதரப்பட்டவையாக இருப்பினும், அவை யாவும் ஏதோவொரு வகையில் ஜனநாயக இயக்கத்தின் வலிமையை உணர்த்துவதில் ஒன்றுபடுகின்றன என்பதே இதில் வியப்புக்குரியதாகும்.

மக்களின் பகுத்துணரும் வலிமையும், புதிய வழிகளை காண்பதற்கும் மற்றும் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்குமான சமூக இயக்கங்களின் வலிமையும் இதில் அடங்கும். பொது மருத்துவம் என்பது இந்தியாவில் ஆழமான விவாதப் பொருளாக மாறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே டாக்டர் கே. எஸ். சஞ்சீவி போன்ற தொலைநோக்குச் சிந்தனையாளர்கள் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

“பொதுவாகவே, சமூகப் பிரச்சனைகளின் மீது பொது விவாதங்களைத் தொடங்குவதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. சுகாதாரம் தொடர்பான திட்டங்கள் என்பவை தொடக்கத்திலேயே உயிரோட்டமான பொது விவாதத்திற்குரிய விஷயங்களாக மாறியிருந்ததோடு, இது போன்ற நலத் திட்டங்கள் அநேகமாக தமிழ்நாட்டில்தான் முதலாவதாக நடைமுறைப்படுத்தப்பட்டன.”

Leave a Reply

You must be logged in to post a comment.