திருவனந்தபுரம்:
பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரைகள் கேரள மாநிலத்திற்கு கவலையளிப்பதாக உள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் தெரிவித்தார். பரிந்துரைகள் அதே வடிவத்தில் அமலாக்கப்பட்டால் மாநிலத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும். கேரளத்தின் பொதுவான இப்பிரச்சனையில் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

15 ஆம் நிதிக்குழுவின் பரிந்துரைகளில் கேரள மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், மாற்றங்கள் செய்வது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிகள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் பேசியதாவது: மாநிலங்களுக்கான வரி வருவாய் 42 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டியது அவசியம் என்பதை நிதிக்குழுவுக்கு உணர்த்த வேண்டும். கேரளத்தின் வரி விகிதம் தற்போது 2.5 சதவீதமாக உள்ளது. இது 10 ஆவது நிதிக்குழுவின் காலத்தில் 3.5 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து 13 ஆவது நிதிக்குழுவின் கால அளவில் 2.34 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

நிதிக்குழு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் பொருள் எதுவாக இருந்தாலும் கடந்த நிதிக்குழு அனுமதித்த விகிதத்தைவிட குறையக்கூடாது என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கலாம். நிதிக்குழுவின் விவாதப் பொருளில் 2011 மக்கள் தொகை அடிப்படையில், மாநி
லத்துக்கான நிதி ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்யப்பட்டால் 1971 முதல் 2011 வரை மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதன் பொருளாதாரப் பயன் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டும். அதையே நிதி ஒதுக்கீடு விகிதம் குறையாமல் இருப்பதற்கான நிபந்தனையாக நிதிக்குழு முன்னால் வைக்கப்படும்.

அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத பற்றாக்குறை இருக்க வேண்டும். நிதி பற்றாக்குறையை 3 சதவீதத்திலிருந்து குறைக்கும் எந்த நடவடிக்கையும் மாநிலத்தின்
கடன், மூலதன செலவை கடுமையாக பாதிக்கும். கடன் வாங்குவதற்கு ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளுக்கு கூடுதலாக வேறு எந்தவிதமான நிபந்தனைகளும் இருக்கக்
கூடாது என்று முதலமைச்சர் கூறினார்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி 15 ஆம் நிதிக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்
பட்டால் மாநிலத்தின் வரி விகிதம் 2.5 சதவீதத்திலிருந்து 1.8 சதவீதமாக குறையும். அடுத்த நிதிக்குழு அனுமதிக்கும் தொகையில் 45 ஆயிரம் கோடி ரூபாய் குறையும் என நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் சுட்டிக்காட்டினார்.

கூட்டத்தில் எளமர் கரீம் (சிபிஎம்), தம்பானூர் ரவி (காங்கிரஸ்), பிரகாஷ் பாபு (சிபிஐ), கே.வி.மனோஜ் குமார் (காங்.எஸ்), பி.பி.வாவ ஜெயராஜ் (பாஜக), சி.பி.ஜோன் (சிஎம்பி), கே.கிருஷ்ணன்குட்டி (ஜேடிஎஸ்), கடகம்பள்ளி சுகு (என்சிபி), சி.பி.ஜார்ஜ், சி.வேணுகோபால் நாயர் (கேரள காங்.பி) உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.