===க.சுவாமிநாதன்===                                                                                                                                                               மின்னணு வர்த்தகத்தில் இந்தியர்களின் வெற்றிகரமான முயற்சிகளுக்கு உதாரணமாகத் திகழ்ந்து வரும் ‘‘பிளிப் கார்ட்’’ நிறுவனத்தின் 77 சதவீதமான பங்குகளை 1 லட்சம் கோடிகளுக்கு பன்னாட்டு வர்த்தக நிறுவனம் வால்மார்ட் வாங்கியிருக்கிறது. இந்து பிசினஸ் லைன் தலைப்பே ‘‘அங்கிள் சாம் கிளப்பில் அங்கமான பிளிப்கார்ட்’’ என்பது ஆகும்.
உலகமயத்தின் கவர்ச்சி முழக்கமான ‘‘போட்டி’’ என்பதன் அரிதாரம் கலைகிற இன்னொரு உதாரணமே வால்மார்ட், பிளிப்கார்ட்டை விழுங்குவது ஆகும். 10 ஆண்டுகால பிளிப்கார்ட்டின் வளர்ச்சி மலரை அதிசயிக்க வைத்திருந்த வேளையில் வால்மார்ட் அதை வளைத்துப் போட்டிருக்கிறது. கடோத்கஜனின் சிரிப்பு வணிக உலகில் எதிரொலிக்கிறது.

வளர்ந்த கதை
‘‘அமேஜான்’’ நிறுவனத்தின் இரண்டு முன்னாள் ஊழியர்களான சச்சின், பின்னி பன்சால் ஆகிய இருவருமே கதாநாயகர்கள். தில்லி ஐஐடியின் வகுப்பறை சகாக்களான இருவரும் ஒரு இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் 2007 இல் இந்நிறுவனத்தைத் துவங்கினர். ஆன்-லைன் புத்தகக் கடையாகவே அது துவங்கப்பட்டது. இ-கார்ட், வீ ரீடு போன்ற இணைய தளங்கள் வாயிலாக வியாபாரம் விரிவாக்கப்பட்டது. இசை, திரைப்படம், விளையாட்டு, மின்னணு சாதனங்கள், அலைபேசிகள் என அதன் வியாபாரச் சரக்குகள் பெருகிக் கொண்டே வந்தன. மொபெல் ஷாப்பிங் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. லெட்ஸ்பை (LETSBUY) என்கிற இ-டெயிலரை அது விலைக்கும் வாங்கியது.2014 இல் அது புழங்குகிற சரக்கின் மதிப்பு ரூபாய் மதிப்பில் 10,000 கோடிகளை (இன்றைய மதிப்பில் 12,350 கோடிகள்) கடந்தது. இந்தியாவின் முதல் மின்னணு சில்லரை வர்த்தக நிறுவனமாக பிளிப்கார்ட் வளர்ந்தது. பாஷன் இ -டெய்லர் மின்த்ரா (MYNTRA) நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. 2014 அக்டோபரில் ‘‘பிக் பில்லியன் டே’’ (நூறு கோடி நாள்) அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அன்றன்றைக்கே டெலிவரி என்ற உறுதிமொழியையும் அளித்தது.
2016 இல் பின்னி பன்சால் சிஇஓ ஆகவும், சச்சின் பன்சால் நிர்வாகத் தலைவராகவும் ஆகிறார்கள். பணப்பட்டுவாடாவுக்கான ‘‘ஃபோன் பீ’’ (PHONE PE) துவங்கப்படுகிறது. ஜாபாங் (JABONG) நிறுவனம் விலைக்கு வாங்கப்படுகிறது. நிறுவனத்தின் மதிப்பு 15.20 பில்லியன்களை (இன்றைய ரூபய் மதிப்பில் சுமார் 1 லட்சம் கோடிகள்) தொடுகிறது. 2017 இல் இ பே (e bay) நிறுவனமும் பிளிப் கார்ட் குழுமத்தில் இணைந்தது.இப்படி 10 ஆண்டுகளில் பன்மடங்கு வளர்ச்சியை அது எட்டியது.

சச்சின் குட் பை
வால்மார்ட் வாங்குவதற்கு முன்பாக ப்ளிப்கார்ட்டின் பங்குகளில் சாப்ட் பேங்க் – 22 சதவீதம், டைகர் குளோபல் – 27 சதவீதம், நாஸ்பர்ஸ் – 14 சதவீதம், இ பே – 7 சதவீதம், டான்சென்ட் – 6 சதவீதம், சச்சின் – 6 சதவீதம், பின்னி பன்சால் – 6 சதவீதம் என்ற அளவுகளில் உடமைகளை வைத்திருந்தன.

தற்போது பிளிப்கார்ட்டின் ஸ்தாபகர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தனது 5.96 சதவீதப் பங்குகளை முழுமையாக விற்றுவிட்டு வெளியேறுகிறார். வால்மார்ட்டிற்கு பங்குகளை விற்றதன் மூலம் அவர் பில்லியனராக மாறிவிட்டார் என்று வணிக இதழ்கள் கூறுகின்றன. சாப்ட் பேங்க், நாஸ்பர்ஸ், இ பே ஆகிய நிறுவனங்களும் கூடாரத்தைக் காலி செய்கின்றன. டைகர் குளோபல் மட்டும் தனது பங்குகளை 8 சதவீதத்திற்கு குறைத்துக் கொள்ளப்போகிறது.
பின்னி பன்சால், டான்சென்ட், மைக்ரோ சாப்ட் போன்றவர்கள் பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கப்போகின்றனர்.வால்மார்ட், பிளிப்கார்ட்டின் பங்குகளில் சிறு பகுதியினை வாங்குவதாகவே சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டதாம். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பெரும்பான்மை பங்குகளை வாங்குகிற முடிவுக்கு வந்ததாம்.

இந்திய நிறுவனங்களை வாங்குவது பற்றி வால்மார்ட் அதிகாரியின் கருத்தை பாருங்கள்:
‘‘இந்திய நிறுவனங்களுடனான இதுபோன்ற பேரங்கள் பெரும்பாலும் ஒரே ஒரு சந்திப்பிலேயே முடிந்துவிடும். ஆனால் பிளிப் பார்ட்டுடன் தொடர்ச்சியாகப் பேசினோம்’’. (இந்து பிசினஸ் லைன் 10.05.2018)

மறு சிந்தனையா?
சாஃட் பேங்க் மட்டும் தனது 20 சதவீதம் பங்குகளை விற்றுவிடுவது என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளது. நாங்கள் இறுதி முடிவை எடுக்க 10 நாட்கள் ஆகலாம் என அது கூறியுள்ளது. (எகானமிக் டைம்ஸ் – 11.5.2018) காரணம் அது 10,000 கோடி ரூபாய்களை ஆகஸ்ட் 2017 இல் தான் பிளிப்கார்ட்டில் முதலீடு செய்துள்ளது. ஓராண்டிற்குள் பங்குகளை விற்றால் அதன் மீது வரிகள் அதிகமாக இருக்கும். ஜப்பான் நிறுவனமான சாப்ட் பாங்கிற்கு இன்னொரு நப்பாசை. இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் பிளிப்கார்ட்டின் மதிப்பு மேலும் அதிகமாகலாம் என்பதே. வியாபார உலகில் எல்லாம் கணக்குதானே!பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கே பங்குகளை விற்கிற திட்டத்தையும் (ESOP) நிறுவனம் ஆகும். தற்போது அவர்கள் வைத்துள்ள பங்குகளில் 50 சதவீதத்தை பணியிலுள்ளவர்களும், 30 சதவீதத்தை பணி ஓய்வு பெற்றவர்களும் முதல் ஓராண்டில் விற்றுக் கொள்ளலாம். இப்பங்குகளை வாங்கிக் கொள்வதற்காக ரூ.3,250 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். ஆனாலும் பிளிப்கார்ட் ஊழியர்கள், ஓய்வுபெற்றவர்களில் பலருக்கு உற்சாகம் இல்லை. பலர் காத்திருந்து விற்கலாம் என நினைக்கிறார்கள்.

பலிக்குமா கனவு!
வால்மார்ட் இந்தியாவிற்குள் ‘‘தரைவழியாகவும், வான்வழியாகவும்’’ நுழைகிற கனவு பலிக்குமா?

அது 2015 இல் இதோபோன்று சீனாவின் இஹோவாடின் (YIHOADIAN) என்ற சிறு மின்னணு நிறுவனத்தை வாங்கியது. ஆனால் ஓராண்டில் அதை ஜே.டி.காம் என்ற நிறுவனத்திற்கு கைமாற்றிவிட்டது.பிரேசிலில் சந்தையைப் பிடிப்பதற்கான வால்மார்ட்டினை 10 ஆண்டு போராட்டம் உள்ளூர் வணிகங்களின் இணைப்பில் இருந்த பிரச்சனைகள், பிரேசிலின் பொருளாதார நெருக்கடிகள் ஆகிய காரணங்களால் வெற்றிபெற முடியவில்லை. 1997 இல் ஜெர்மனிக்குள் கடை திறந்த வால்மார்ட் 2006 இல் அதை மூடியது.

இந்தியாவிலும் பாரதி குழுமத்துடனான அதன் இணைவினை வெற்றிபெற முடியவில்லை.
தற்போது பிளிப்கார்ட்டை குறிவைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் களத்தில் உள்ள இ பே (e bay) மூலதன அளவில் இரண்டு மடங்கு பெரியது. அலிபாபா 25 மடங்கு பெரியது. அமேசான் 38 மடங்கு பெரியது. எனவே பிளிப் கார்ட் வழியாக வால்மார்ட் வெற்றிபெற முடியுமா? என்ற கேள்வி உள்ளது.

கலைந்துவிட்டதா ‘‘இந்தியக்’’ கனவு?
சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டு பிளிப்கார்ட்டில் தலைமைச் சரக்கு அலுவலராகப் பணியாற்றிய புனித்சோனி இந்த பேரம் அறிவிக்கப்பட்டவுடன் கூறிய வார்த்தைகள் முக்கியமானவை.‘‘சீனாவுக்கு அலிபாபா உள்ளது. டான்சென்ட், ஸியோவாமி ஆகியனவும் உள்ளன. அமெரிக்காவுக்கும் இப்படிப் பெயர் சொல்கிற பல நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவிலும் சர்வதேச இணையதள நிறுவனம் ஒன்று உருவாகிற நாள் என்று வரும்?’’
விழுங்குகிற விளையாட்டில் திமிங்கலங்களே வெல்கின்றன!

Leave a Reply

You must be logged in to post a comment.