கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடக்க உள்ள நிலையில், இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை எதிர்ப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைமையிலான இடதுமுன்னணியும் பாரதிய ஜனதா கட்சியுடன் களத்தில் கைகோர்த்து செயல்படுவதாக முற்றிலும் பொய்யான – இழிவான அவதூறுப் பிரச்சாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இதை வன்மையாகக் கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலச் செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா, இதுதொடர்பாக விளக்கம் அளித்து மே 9 அன்று மாலை கொல்கத்தாவில் கட்சியின் தலைமையகமான முசாபர் அகமது பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சியை எதிர்ப்பதற்காக இடதுசாரிக் கட்சிகள், பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு கொண்டிருப்பதாக முற்றிலும் உள்நோக்கம் கொண்ட, முற்றிலும் அவதூறான, எந்தவிதமான அடிப்படை ஆதாரமுமற்ற – பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்தை திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் கூட்டாகவே மேற்கொண்டிருக்கின்றன. 2014ஆம் ஆண்டு முதல் இருதரப்புமே மதவாத அடிப்படையில் மக்களை அணிதிரட்டுவதன் மூலம் அரசியலில் லாபம் பார்க்க முயற்சிக்கின்றன. தற்போது இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்கு இடையே உள்ள கள்ள உறவை மறைக்கும் நோக்கத்துடன், இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராக இழிபிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. மேற்குவங்கத்தில் கடந்த நான்காண்டு காலமாக இடதுமுன்னணியின் முழக்கமும் பிரச்சாரமும் மிகத்தெளிவான ஒன்றாகும். தேசத்தை பாதுகாக்க பாஜகவை வெளியேற்றுவோம், வங்கத்தை பாதுகாக்க திரிணாமுல்லை வெளியேற்றுவோம் என்பதே எங்களது அடிப்படையான முழக்கம். ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலின்படி செயல்படுகிற பாஜகவே இன்றைக்கு நாட்டின் மிக முககிய அச்சுறுத்தல் சக்தியாகும். வங்கத்தில் திரிணாமுல் கட்சி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஆர்எஸ்எஸ் பலம் என்பது 11 மடங்கு அதிகரித்திருக்கிறது.

வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜகவை முன்னிறுத்துவதே திரிணாமுல்லின் நோக்கம் ஆகும். இந்தத் தேவைக்காக, இடதுசாரிகளை அனைத்து விதத்திலும் ஒடுக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமாகிறது. எனவேதான் அனைத்து விதத்திலும் அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். இடதுசாரிகள், பாஜகவை எதிர்ப்பதற்காக திரிணாமுல்லுடன் இணைந்து செயல்படுவதாகவும், திரிணாமுல்லை எதிர்ப்பதற்காக பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாகவும் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் நாடு முழுவதும் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மை அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.எமது கட்சி, இந்திய நாட்டின் முதல்பெரும் எதிரி பாஜகதான் என்று பகிரங்கமாக பிரகடனம் செய்திருக்கிறது. எமது கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் பாஜகவுடன் அல்லது எதிரி முகாமுடன் எந்தவிதமான தொடர்பு வைத்திருந்தாலும், கட்சி விதியின்படி, உடனடியாக அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார். வங்கத்தில் அப்படி இரண்டு உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் எங்கும் எந்த சமரசமும் இல்லை. பஞ்சாயத்து தேர்தலை பொறுத்தவரை எமது கட்சியால் ஆதரிக்கப்படுகிற எந்தவொரு கட்சி அல்லாத, சுயேட்சையான நபரும் கூட பாஜகவுடன் அல்லது எதிரி முகாமுடன் எந்தவிதமான அரசியல் உறவு கொண்டிருந்தாலும் அந்த நபருக்கு கட்சி அளித்துவரும் ஆதரவு உடனடியாக திரும்பப் பெறப்படும்.

வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் விதத்தில் இணக்கமான முறையில் ஒரு சூதாட்டத்தை நடத்தி வருகின்றன. திரிணாமுல் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். அவர் தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார். பாஜக முகாமுக்கு சென்று வேலைசெய்து கொண்டிருக்கிறார். திரிணாமுல் காங்கிரசின் மற்றொரு தலைவராக இருந்தவர் லாக்கெட் சட்டர்ஜி. இவரும் தற்போது பாஜக தலைவராக வலம் வருகிறார்.ஆனால் எந்தவொரு இடதுசாரி தலைவரையும் இப்படி கூறிவிட முடியாது. எமது கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெளியேற்றப்பட்ட சிற்சில நபர்கள் இயல்பாகவே எதிரி முகாமின் கூட்டாளியாக மாறிக்கொள்கிறார்கள். இந்த விசயத்தில் எமது கட்சி உறுதியான கண்காணிப்புடனும் கண்டிப்புடனும் இருக்கிறது. எதிரி முகாம்களுடன் எந்தவொரு தொடர்பு வைத்திருந்தாலும் அந்த நபர் உடனடியாக நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்.

மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலைப் பொறுத்தவரை இடதுமுன்னணி அல்லது இடதுமுன்னணியின் ஆதரவுபெற்ற வேட்பாளர்கள் போட்டியிடாத இடங்களில் திரிணாமுல்லையும் பாஜகவையும் அரசியல் ரீதியாக எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறோம்.

நாடியா மாவட்டத்தில் பாஜகவின் ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரமா பிஸ்வாஸ் பங்கேற்றதாக சமூக ஊடங்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் முற்றிலும் பொய்யான ஒன்றாகும். திரித்து வெளியிடப்பட்டதாகும். நாடியாவில் நடைபெற்றது தேர்தல் பிரச்சார ஊர்வலம் அல்ல. சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி குண்டர்களின் தாக்குதலுக்கு எதிராக ஒட்டுமொத்த கிராம மக்களும் அவரவர் கொடிகளை ஏந்தி நடத்திய பேரணி ஊர்வலமாகும். அதில், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் ரமா பிஸ்வாஸ் பங்கேற்றார். எனவே வங்கத்தில் எந்தவிதத்திலும் பாஜகவுடன் தேர்தல் உடன்பாடோ அல்லது தேர்தல் பிரச்சாரமோ இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்.
இவ்வாறு டாக்டர் சூர்ய காந்த மிஸ்ரா கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: