உதகை,
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் நிர்பந்தம் அளித்த பிரச்சனையில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவிடக்கூடாது. வெளிப்படையான விசாரணை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 24ஆம் தேதி அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முற்றுகையிடப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று உதகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் நிர்பந்தம் அளித்த பிரச்சனையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிபிசிஐடி விசாரணையோ அல்லது சந்தானம் குழு விசாரணையோ கண்துடைப்பு நடவடிக்கைகளே ஆகும். இத்தகைய விசாரணைகளால் முழுமையான உண்மைகள் வெளிவராது. எனவே நாங்கள் ஏற்கனவே கோரிய அடிப்படையில் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு அதன்முலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைள் தமிழ்நாட்டிற்கான மிகப்பெரிய துரோகம் ஆகும். தற்போது நீட் நுழைவு தேர்விற்கான பயிற்சி மையங்கள் என்ற பெயரில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவில் பணம் புழங்கும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது. நீட் நுழைவு தேர்வின்போது மாணவிகள் அவமானப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது. மாநில அரசு நீட் பிரச்சனையில் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதேபோல்தான் காவிரி பிரச்சனையிலும் மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காத்திருப்பு போராட்டம்:
நீலகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக பட்டா வழங்காததை கண்டித்தும், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார இணைப்பு அளிக்க மறுப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் ஒருபகுதியாக சனியன்று (இன்று) கூடலூர் காந்திதிடலில் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த கோரிக்கைகள் வெல்லும் வரை சக்திமிக்க போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.