மேட்டுப்பாளையம்.
மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதா எம் சாண்ட் இயற்கை வளத்தை பாதுகாக்க செயற்கை மணல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம் என கட்டுமான வல்லுனர்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

காட்டாறுகள் காடு மற்றும் மலைகளில் ஓடி வரும்போது பாறைகளை உருட்டியும் சிதைத்தும் அரித்தும் சமதளத்திற்கு கொண்டு வரும் கனிமமே ஆற்று மணல். ஆற்றுப்படுகையில் ஒரு மீட்டர் உயரத்திற்கு மணல் உருவாக அரை நூற்றாண்டேனும் தேவை. அடிப்படையில் ஆற்று மணல் ஒரு தண்ணீர் தாங்கி. மணல் இல்லாவிட்டால் பூமியின் அடுத்தடுத்த மண் அடுக்குகள் வழியாக தண்ணீர் உள்ளே சென்று விடும். இயற்கையின் நியதிப்படி இயற்கையாய் உற்பத்தியாகும் மணலின் அடிப்படையில் மட்டுமே மனிதர்கள் மணலை எடுத்துக்கொள்ளலாம். இதன்படி, ஆண்டுக்கு ஒரு டன் மணல் உற்பத்தியானால் அதே அளவு அல்லது அதைவிட குறைவாக மட்டுமே மணலை எடுக்கலாம். அப்போதுதான் இயற்கை சமநிலையை காக்க இயலும்.

ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கையாய் உற்பத்தியாகும் மணலைக்காட்டிலும் நூறு மடங்கிற்கும் மேல் ஆற்று மணலை அதன் அடியாழம் வரை சுரண்டி விட்டனர். அரை மீட்டர் என்றிருந்த அளவை விட 10, 25 மீட்டர் ஆழம் வரையெல்லாம் மணல் அள்ளபட்டுவிட்டது. தமிழகத்திற்கு மொத்தமாக ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி யூனிட் மணல் தேவை என்ற நிலையில் இனி தமிழக ஆறுகளில் அள்ள மணலே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இறக்குமதி மணல் மூலம் நமது மணல் தேவையை பூர்த்தி செய்வது நீண்ட காலத்திற்கு சாத்தியமில்லை என்பதோடு இது நிரந்தர தீர்வும் அல்ல. ஏனெனில் சர்வதேச அளவில் மணல் ஏற்றுமதி விவகாரம் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. நமது பாரம்பரிய கால்வாய்கள் ஆற்றின் மணல் மட்டத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள நிலையில் விதிகளை மீறி பல மீட்டர் ஆழத்திற்கு மணலை அள்ளிவிட்டதால் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியவில்லை.

இதனால் சிற்றாறுகள், ஏரிகள், மற்றும் குளங்களில், தண்ணீர் வரத்து தடைபட்டு விவசாயத்திற்கும் நீர் இல்லை. எனவே, இனி நீதிமன்றங்கள் தடை விதித்தாலோ அல்லது அனுமதியளித்தாலோ இனி தமிழக ஆறுகளில் அள்ள மணலே இல்லை என்ற நிதர்சன சூழலில் மணலுக்கான மாற்றை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இதுகுறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த எம்.சான்ட் தயாரிப்பாளர் நந்தகுமார் கூறியதாவது, மணலுக்கு மாற்றான எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணலுக்கு நம் கட்டுமானங்கள் மாறுவது கட்டாயமாகிறது. கருங்கல் ஜல்லிகளை உடைத்து தயாரிக்கப்படுவதே இந்த எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணல். இதுவும் கட்டுமானத்துறையின் தரக்கட்டுப்பாடான ஐ.எஸ்.383 கொண்டதுதான் என்பதால் மணலை விட இதன் தரமும் வலிமையையும் கூடுதலாகும்.

மேலும், செயற்கை மணல் கான்கரீட்டில் SUPERPLASTICIZER கலவை கலந்து பயன்படுத்தும்போது ஆற்று மணல் கான்கரீட்டை விட மூன்று மடங்கு இவை உறுதியானதாக இருக்கும், மத்திய தரைக்கடல் நாடுகள் உட்பட உலகின் தொண்ணூறு சதவிகித நாடுகளில் செயற்கை மணலை கொண்டே பல உறுதியான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீபா செயற்கை மணலால் கட்டப்பட்டது தான் என தெரிவிக்கிறார். தட்டுப்பாடு காரணமாக மணல் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் இதனை விட சுமார் நாற்பது சதவிகிதம் குறைவான விலையில் தடையின்றி செயற்கை மணல் கிடைக்கும். அதேநேரத்தில் தான் வாங்கும் செயற்கை மணலின் தரத்தை பரிசோதித்து பயன்படுத்துவதே சரியாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். கண்ணாடி ஜாடியில் உள்ள தண்ணீரினுள் எம் சாண்டை போட்டால் நீரின் நிறம் மாறக்கூடாது என்பது தரம் அறிய எளிய வழி. மேலும் அருகில் ஆய்வகம் உள்ள கல்லூரிகளில் கூட இதனை கொடுத்து சில நூறு ரூபாய் செலவில் தரத்தை உறுதிபடுத்திக் கொள்ளலாம். இருப்பினும் அரசால் அங்கீகார சான்றிதழ் பெற்ற நிறுவனங்களில் எம் சாண்ட்டை வாங்குவதே சிறந்தது என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

மேலும் ஹாலோ பிளாக் கற்கள் செங்கலை விட உறுதி குறைவானது என்பதால் அதனை சுற்றுச்சுவர் கட்ட மட்டுமே சிலர் பயன்படுத்தும் நிலையில் தற்போது எம் சாண்டால் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் செங்கல் எனப்படும் ஹாலோ பர்ண்ட் பிளாக் கற்கள் செங்கலை விட 30 சதவிகிதம் வலுவானதாகவும், 60 சதவிகிதம் எடை குறைவாகவும், 45 சதவிகிதம் சூட்டை தாங்கி கட்டிடத்தின் உள்பகுதியை குளிர்ச்சியாக வைக்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் மாற்று மணலுக்கு மாறிவிட்ட நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை மேற்கண்ட எதையுமே மாற்றாக பயன்படுத்துவது மிக குறைவாக இருப்பதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததே என கூறப்படுகிறது. ஆகவே கட்டுமானப் பணிகளுக்கு என இயற்கை வளங்கள் இனியும் வரைமுறையின்றி சுரண்டப்பட்டால் தமிழகத்தில் விவசாயப் பணிகளே முடங்கிவிடும். நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க மக்களின் சந்தேகங்களை நீக்கி தரமான மாற்று பொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை காண வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என கட்டுமான வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

இரா.சரவணபாபு.

Leave a Reply

You must be logged in to post a comment.