சேலம்,
சேலத்தில் மாநகராட்சி பள்ளியை வணிக வளாகமாக மாற்றும் முடிவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சேலம் இரண்டாவது அக்ரஹாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில்வதற்காக கடந்த 1936 ஆம் ஆண்டு பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளிக்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இலவசமாக நிலம் வழங்கினர். முன்பு நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயின்று வந்த இந்த நடுநிலைப் பள்ளியில் தற்போது சுமார் 70 குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும், இந்த கட்டிடத்தில் தற்போது சேலம் மாநகராட்சி சார்பில் யுனானி மருந்தகம், பிறப்பு, இறப்பு பதிவாளர் அலுவலகம் அகியவை இயங்கி வருகிறது. இந்நிலையில் சேலம் மாநகரமானது ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த பள்ளியை வணிக வளாகமாக மாற்றுவதற்கு சேலம் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது செயல்பட்டு வரும் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, இந்த பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவிற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுக்க ஆலோசித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.