கோவை,
மனித கழிவுகளை அகற்ற கேரளாவைப் போல் ரோபோக்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகராட்சிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாநகராட்சியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் தலைமையில் வெள்ளியன்று மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி, கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்களுடன் சுகாதாரப் பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் ஆகியோரின் நலன் குறித்தும், அவர்களின் ஊதிய விபரங்கள், பணி நியமனங்கள், பதவி உயர்வு, இன சுழற்சி முறை ஆகியவை குறித்தும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், மாநகராட்சியின் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முறையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா என்பதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்படாமல், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது போல் கோவை மாநகராட்சியிலும் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு காலனி, கையுறைகள் பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கவும் விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகரப் பொறியாளர் லட்சுமணன், மாநில தாழ்த்தப்பட்டோர் நலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இரா.செந்திவேல் மற்றும் உதவி ஆணையர்கள் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: