”நாங்கள் குடியானவர்கள் என்கிறோம்..
எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறது..
நிலமும், வீடும் தாருங்கள் என்கிறோம்..
அதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்கிறது..
மின்சாரமும், அடிப்படை வசதிகளும் இல்லையா என கேட்கிறோம்..
குரூர புன்னகையோடு சொல்லாமல் சொல்கிறது. அரசு..
நீங்களும் ஒரு வகையில் அகதிகளே..”

மீனவ நண்பன் திரைப்படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது.. ‘தரை மேல் பிறக்க வைத்தான். எங்களை கண்ணீரில் மிதக்க விட்டான்.’ இங்கு தரை என்பதற்கு பதிலாக மலை மேல் பிறக்க வைத்தான் என வார்த்தைகளை மாற்றிப் போட்டால் இந்த பாட்டு பொருந்திப் போகும் நீலகிரி மலையில் வாழும் மக்களுக்கு.. துயரமும், அவலமும் நிறைந்த வாழ்வியல் சூழல்.. ஆனால் மீண்டும் மீண்டும் நம்ப வைக்கப்படுகிறோம் நாம் “ நவீன “ இந்தியாவில்தான் வாழ்கிறோம் என்று.. இரண்டாவது சிரபுஞ்சி என்றழைக்கப்படும் தேவாலா என்றோரு சிற்றுரில் வசிக்கும் ஒரு பெண் சொல்கிறார்.. “ எங்கள் பிள்ளைகளுக்கான கல்விச் செலவில் மாதம் முன்னூறு ரூபாய்க்கு வாங்கும் மெழுகுவர்த்திகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ” என்று.. கூடலூர் – பந்தலூர் பகுதிகளில் இந்த வீட்டைப் போல பத்தாயிரத்திற்கும் மேலான வீடுகள் நிரந்தரமாகவே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. டிஜிட்டல் இந்தியா என்ற மோடியின் உரத்த முழக்கத்திற்கிடையே மின் இணைப்பேனும் தாருங்கள் என  நாங்கள் இறைஞ்சுவது எவர் காதிலும் விழுவதேயில்லை.. மீண்டும் மீண்டும் மனு கொடுத்துக் கொண்டேயிருக்கிறோம்.. வனமும், இருளும், விலங்குகளும் சூழ்ந்த இடத்தில் மின்சார வெளிச்சமில்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்து பாருங்கள்..

பல்லாயிரக்கணக்கான மக்கள் மூன்று தலைமுறையாக வாழும் நிலங்களுக்கு நிலப்பட்டாவோ வீட்டுமனை பட்டாவோ இதுவரை அளிக்கப்படவில்லை.. அரசு மற்றும் (அ) நீதிமன்றங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள்  என்று.. ஒரு தொடர் நிலப்பரப்பில் வாழும் பல ஆயிரம் மக்கள், நில உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிற சொந்த மண்ணின் அகதிகளாகவே வாழ்கிறார்கள்.. பிரிவு 17, பிரிவு 53 வகை நிலங்கள், புலிகள் காப்பகம், யானைகள் வழித்தடம், தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம், என என்னவெல்லாமோ காரணம் சொல்லும் அரசுகள் எளிய எம்மக்களுக்கான நில உரிமைகளை மறுப்பதில் தீர்க்கமாக இருக்கிறார்கள்.. ’ஓவேலி’ என்றோரு பேரூராட்சி முழுவதிலும் ஒரே ஒருவருக்குக் கூட நிலப்பட்டாவோ, மனைப்பட்டாவோ இல்லை என்ற தகவல் ஒரு வேளை உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.. ஆனாலும் அதுவே இம்மண்ணின் யதார்த்தம்.

1970 முதல் 1985 வரையிலான ஆண்டுகளில் இலங்கையிலிருந்து அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட தாயகம் திரும்பிய தமிழர்கள் வாழ்க்கையோ இன்னும் துயரம்.. கோத்தகிரி பகுதியில் 13 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு விபரங்கள் அவர்களின் துயர வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. இந்த கிராமங்களில் உள்ள 1698 குடும்பங்களில் 16 பேரிடம் மட்டுமே நிலம் சொந்தமாக இருக்கிறது.. இந்த கிராமங்களில் அரசாங்க வேலைக்கு செல்வோர் வெறும் 11 பேர் மட்டுமே.. எல்லா கிராமங்களிலும் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா இல்லை.. இந்த கிராம இளைஞர்களில் உயர் கல்வி பயின்ற இளைஞர்கள் எண்ணிக்கை மிக மிக சொற்பமே.. குன்னூருக்கு அருகில் உள்ள பக்காசுரன் மலையில் தாயகம் திரும்பிய மக்கள் வசிக்கும் அரசாங்க குடியிருப்பிற்கே (?) 40 ஆண்டுகளாக நடப்பதற்கு பாதை இல்லை.. பல கிராமங்களில் பிணம் புதைப்பதற்கான இடுகாடு கூட இல்லை.. வாழும் போதும் இறந்த பிறகும் ஒரே நிலைதான்.

தாயகம் திரும்பியோருக்காக என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகம் (TANTEA) எனும் நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, கடந்த பல ஆண்டுகளாகியும் ஓய்வு பெற்றவர்களுக்கான பணிக்கொடையும் கூட இன்றுவரை வழங்கப்படவில்லை.. இந்நிறுவனத்தின் மருத்துவமனைகளோ பல இடங்களில் பூட்டிக் கிடக்கின்றன.. இத்தகைய நிலைமைகளுக்கு தீர்வை வலியுறுத்தி கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது இதர அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு போராட்டக்களம் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது.. கூடலூரில் மாபெரும் காத்திருப்புப் போராட்டம், கோத்தகிரியில் வாழ்வுரிமை மாநாடு என போராட்டங்களுக்கு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.. கோரிக்கைகளை நிறைவேற்றுக என நம்பிக்கைகளோடு ஆர்ப்பரித்து அணி திரளும் மக்கள் கூடுகிற போராட்டங்கள் வெல்லட்டும்..

“ உரிமை வேறு.. குற்றம் வேறு
என்பதையே நீங்கள் காண மறுக்கிறீர்கள்..
ஒவ்வொரு உரிமையையும் குற்றமாக்கி
நீங்கள் உரிமையையே ஒழிக்கிறீர்கள்..”
1843 இல் ரைனீஷ் ஜைடுங் இதழில்

-காரல் மார்க்ஸ்

Leave a Reply

You must be logged in to post a comment.