சென்னை:
நடிகர் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகும் அவரை காவல்துறையினர் கைது செய்யாமல் உள்ளனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்போடு சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் உயர் பொறுப்பில் உள்ள பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை கொண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார். இதன்மீது சென்னை மத்திய பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதிலிருந்து தனக்கு முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் பி.சுகந்தி உள்ளிட்ட 9 பேர் ஆட்சேபனை மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.ராமதிலகம் வியாழனன்று (மே 10) அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஒரு பெண் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்றால் முக்கிய நபர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார். அதை தங்களால் ஜீரணிக்க முடியவில்லை. மூத்த குடிமகனான எஸ்.வி.சேகர், பெண்களுக்கு எதிரான வார்த்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று நன்றாகத் தெரிந்து இருக்க வேண்டும்.

கோபத்தில் ஒருவரை ஒருவர் அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டிக் கொள்வது வழக்கமானதுதான். அப்படித் திட்டிக்கொள்பவர்கள் பின்னர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வார்கள். ஆனால், ஒரு கெட்டவார்த்தை எழுத்து வடிவில் வெளியிடும்போதே அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சம்பந்தப்பட்ட நபர்கள் நன்றாக உணர்ந்து இருப்பர்.

மற்றொருவர் எழுதிய பதிவைத்தான் தன் முகநூலில் வெளியிட்டதாக மனுதாரர் கூறுகிறார்.ஆனால், அவ்வாறு பிறரது பதிவை வெளியிடும்போது, அதில் உள்ள கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாகத்தான் அர்த்தம். என்ன செல்லப்பட்டுள்ளது என்பதை விட யார் சொன்னது என்பது முக்கியமானது ஆகும். சமுதாயத்தில் மதிக்கப்படும் நபர் ஒருவர் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டால் அதனை உண்மை என்றுதான் பொதுமக்கள் நம்புவார்கள்.
மனுதாரர் பெண்களை நேரடியாகவே விமர்சித்துள்ளார். தலைவர்கள் தங்களை பின்பற்றுபவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் உணர்ச்சி கொத்ளிப்பினால் இதுபோன்ற அவதூறு கருத்துக்களை வெளியிடும் இளைஞர்கள் பலர் கைது செய்யப்படுகின்றனர். சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.

வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லோரும் தன்னுடைய கர்ப்பை பணயம் வைத்துதான் முன்னேறுகிறார்கள் என்ற அவதூறு கருத்து பெண்களின் எதிர்காலத்தை அழித்துவிடும்.பெண்கள் குறித்த தவறான எண்ணத்தைச் சமூகத்தில் உருவாக்கும். வேலைக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணுகிற பெண்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை உருவாக்கும். இதனை அனுமதித்தால் பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வரவே மாட்டார்கள்.
எஸ்.வி.சேகர் பிறருடைய பதிவை வெளியிட்டதற்காகத்தான் வருத்தம் தெரிவித்தாரே தவிர, அந்த பதிவில் உள்ள கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை. ஒருவரை சாதிச் சொல்லி அழைத்தாலே அது மிகப்பெரிய குற்றம். அப்படி இருக்கையில் படுக்கையை பகிரிந்து கொண்டால்தான் சமுதாயத்தில் முன்னுக்கு வரமுடியும் என்று சொன்னால் பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கும் பொருந்துமா?

பொதுவாழ்க்கையில் உள்ள தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் சமுதாயத்தில் அமைதியையும் சந்தோசத்தையும் ஏற்படுத்த வேண்டும். எஸ்.வி.சேகரின் கருத்து ஒட்டுமொத்த பெண்ணினத்தையே அவதூறு செய்கிறது. மக்களின் நம்பிக்கையை இழக்கும் வகையில் நீதிமன்றம் செயல்பட முடியாது. எஸ்.வி.சேகர் வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்திய பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கும்போது, பிரச்சனைக்கு மூலகாரணமானவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது.சாதாரண மனிதனுக்கு எதிரான வழக்கைக் காவல்துறை எப்படி விசாரிக்குமோ அதுபோலத்தான் மனுதாரரின் வழக்கையும் விசாரிக்க வேண்டும். மனுதாரர் எஸ்.வி.சேகர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதிக்கும் காவல்துறை
இவ்வளவு கடுமையோடும், கண்டனத்தோடும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு முறை முன்ஜாமீன் மனு ரத்தான பிறகும் காவல்துறையினர் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் இருப்பதன் மர்மம் என்ன? குற்றவாளியான எஸ்.வி.சேகர் காவல்துறையினர் பாதுகாப்போடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து மயிலாப்பூர் காபாலீஸ்வரர் கோவில் குளம் அருகே கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் கூறுகையில், “எஸ்.வி.சேகர் காவல்துறை பாதுகாப்போடு அடிக்கடி வெள்ளீசுவரர் கோவிலுக்கு வந்து போகிறார். நேற்று கூட (மே 10ந் தேதி) பிஜேபி கொடி கட்டிய காரை அவரே ஓட்டி வந்தார். அவருடன் ஒரு துப்பாக்கி ஏந்திய காவலரும், மற்றொரு காவலரும் வந்தனர். அவரை கோவில் தர்மகர்த்தா ஒருவர் வந்து உள்ளே அழைத்துச் சென்றார். அவரையெல்லாம் கைது பன்னமாட்டாங்க. என்னா போலீஸ் அவங்க பாக்கெட்டுக்குள்ள” என்றார்.

சிறுசிறு போராட்டங்களுக்கெல்லாம் எப்ஐஆர் பதிவு செய்து உடனடியாக கைது செய்யும் காவல்துறை சமூகத்தின்அமைதியை சீர்குலைத்த எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?

Leave a Reply

You must be logged in to post a comment.