திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் உடுமலை, ஆர்.கே.ஆர் மேல்நிலைப்பள்ளியில் சனியன்று காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ளது.

இவ்வேலை வாய்ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமில் 5ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐடிஐ, தொழில் கல்வி, பொறியியல், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்துவித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். தையல் தெரிந்தவர்களுக்கு அதிக அளவில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளுபவர்கள் www.ncs.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, அதில் வழங்கப்பட்டுள்ள பதிவு எண்ணுடன் முகாமில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், வேலை வாய்ப்பு முகாமில் நேரில் வந்து பதிவு செய்து கொண்டுகலந்து கொள்ளலாம். இப்பணி முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் கலந்து கொண்டு பணியில் சேருகின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமையில் நடைபெறும் இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் பெறுவோருக்கு கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை மு.ராதாகிருஷ்ணன், பணிநியமன ஆணையினை வழங்க உள்ளார்.

இம்முகாமில் பல பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்கள் பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இப்பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சியினைத் தொடர்ந்து வேலை வாய்ப்பும் தனியார் நிறுவனங்களில் ஏற்படுத்தித் தரப்படும். மேற்கண்ட தகவலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: