கோவை,
கோவையில் சட்டவிரோதமாக குட்கா ஆலை செயல்பட உடந்தையாக இருந்ததாக திமுகவின் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்வட்டு வந்த குட்கா ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக ஆலை மேலாளர் ரகுராம் உட்பட 4 பேரை கைது செய்தனர். இருப்பினும் ஆலை உரிமையாளர் அமித்ஜெயின் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க தனிப்படையினர் தில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆலையின் மேலாளர் ரகுராமை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்த ஆலை செயல்பட கண்ணம்பாளையம் பேரூராட்சித் தலைவராக இருந்த திமுகவை சேர்ந்த தளபதி முருகேசன் உடந்தையாக இருந்ததாக ரகுராம் வாக்கு மூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தளபதி முருகேசனை சூலூர் காவல்துறையினர் வியாழனன்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தளபதி முருகேசனை வெள்ளியன்று காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். இதில் அவரை வரும் மே 25 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: