விருதுநகர்:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருதுநகர் மாவட்டத்திற்கு வெள்ளியன்று வருகை தந்ததையடுத்து மக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மனுக்களைப் பதிவு செய்த பின்பு வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஏராளமானோர் காலை முதல் மனுக்களை வழங்குவதற்குப் பதிவு செய்தனர். அவர்களை ஏ, பி, சி என பிரித்து காவல்துறையினர் உட்கார வைத்தனர். ஆளுநர் 11.30 மணிக்கு மனுக்களைப் பெற ஆரம்பித்தார். பாஜக-வினர், பாஜக ஆதரவாளர்களின் மனுக்களைப் பதிவு செய்யாமலே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆளுநரிடம் மனு அளித்துவிட்டு வந்த பாஜக பிரமுகர் தர்மராஜன் கூறுகையில், ஆளுநரிடம் மனு அளித்ததால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் விவசாயம் பெருகும். காவிரியில் தண்ணீரைப் பெறத் தேவையில்லை. உள்ளூரில் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் உலகத்திற்கே உணவு அளிக்கலாம் என பத்திரிகையாளர்கள் முன்பு அள்ளி விட்டார்.

கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம்                                                                                                                                 தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா கூறுகையில், ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்ட முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.10 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார். இதுவரை ஆலை நிர்வாகம் பணம் வழங்கவில்லை. ஆளுநரிடம் மனு கொடுத்தால் காரியம் நடக்கும் என நம்பி வந்தோம். ஆனால் ஆளுநரோ தமக்கு தமிழ் தெரியாது. இந்தி தான் தெரியும். தமிழ் படிக்க இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். அதற்குள் நான் இந்த மாநிலத்தை விட்டுச் சென்று விடுவேன் எனத் தெரிவித்தார். வாங்கிய மனுவை அப்படியே ஆட்சியரிடம் கொடுத்து விட்டார். இதனால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது என்றார்.

குன்னூரைச் சேர்ந்த விவசாயி கணேசன் கூறுகையில், தனது மகன் ஆயுள் தண்டனை கைதியாக பத்து வருடங்களுக்கு மேல் சிறையில் உள்ளார். மாநில முதல்வர் நீண்ட காலம் சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்தார். மொத்தம் தமிழக ஜெயில்களில் 1,800-க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் உள்ளனர். ஆளுநர் கையெழுத்துப் போட்டால் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் எனவே மனு அளித்தேன் என்றார்.

குடியிருப்போர் நலச் சங்கம்                                                                                                                                                      சாத்தூர் போக்குவரத்து நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. நான்கு வழிச்சாலையால் இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே வைப்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துக் கொடுத்தால் விபத்து ஏற்படாது என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆளுநரிடம் மனுக் கொடுத்தால் ஒரு வேளை இப்பணிகள் நடக்குமோ என்ற நம்பிக்கையில் மனுக் கொடுத்தோம் என்றார் பசீர் ஹீசைன் என்பவர். பாஜக இளைஞரணியைச் சேர்ந்த சிலர் முன் கூட்டியே மனுக்களைக் கொடுத்து விட்டு பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தனர். அப்போது, தமிழக அரசு ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அவர் உச்சநீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர். எனவே நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்றனர்.

ஆளுநர் இருக்காரா? இல்லையா?                                                                                                                                                  காவல்துறையினர் முன் பதிவு செய்யாத சிலரை மனுக் கொடுக்க அனுமதித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்டநேரம் வரிசையில் நிற்கும்போது பதிவு செய்யாதவர்களை ஏன் அனுமதிக்கிறீர்கள் என பலர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அனைத்து ஊடகத்துறையினரும் பிரச்சனையைப் படம் பிடிக்க உள்ளே சென்றனர். சிறிது நேரத்தில் ஏராளமான காவல்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்பு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையின் கதவுகளை காவல்துறையினர் பூட்டினர்.

கோஷம் போட்ட பாஜகவினர் :                                                                                                                                                      ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் சாமி கும்பிட்டார். இதனால் திருவில்லிபுத்தூரில் காலை ஆறு மணி முதல் 11 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன. பின்பு, விருதுநகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சென்று அங்கும் சாமி கும்பிட்டார். அவர் வரும்போது, பாஜகவினர் ‘பாரத் மாதா கீ ஜே’ என கோஷமிட்டனர். அரசு நிகழ்ச்சியில் வந்து இப்படி கட்சி நிகழ்ச்சி போல பாஜகவினர் கோஷம் போடுகின்றனரே என காவல்துறையினர் புலம்பினர். ஆனால், யாரையும் தடுக்கவில்லை. அப்புறப்படுத்தவும் இல்லை.

குப்பை அள்ளும் நிகழ்ச்சி ரத்து                                                                                                                                            மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தையொட்டி விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆளுநர் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் பிற்பகல் 3.15 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் முன் கூட்டியே வரவழைக்கப்பட்டு தேசபந்து மைதானத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் கையுறைகள் புதிதாக வழங்கப்பட்டிருந்தன. இரண்டு டப்பாக்களில் குப்பைகளை தயார் நிலையில் நகராட்சி ஊழியர்கள் வைத்திருந்தனர். ஆளுநர் வருவதற்கு முன்பு அதை அங்கு கொட்டி விட வேண்டும் என நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதை தெரிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் முன் கூட்டியே படம் பிடித்தனர். இதனால், ஆளுநர் குப்பை அள்ளும் நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.
செவிலியர் பயிற்சி மாணவிகள் அவதி : ஆளுநர் பிற்பகல் 3.15 மணிக்கு வருகிறார் என்பதால் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் 50 பேரை கடும் வெயிலில் பகல் 2.30 மணிக்கு வரவழைத்தனர். அவர்களை துணியால் அமைக்கப்பட்ட பந்தலுக்குள் அமர வைத்தனர். அங்கு மின் விசிறி ஏற்பாடுகள் ஏதும் செய்யவில்லை. ஆளுநர் அமரும் இடத்திற்கு மட்டும் ஏர் கூலர் மற்றும் மின் விசிறி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால், மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால் ஆளுநரோ, மாலை 4.30 மணிக்கே வந்தார்.

100 சதவீதம் சுத்தமாம்                                                                                                                                                               ஆளுநர் 100 சதவீதம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியை ஆங்கிலத்தில் வாசித்தார். அதை மாணவிகள் திரும்பக் கூறினர். இதையடுத்து, தமிழில் மாணவிகள் கூற அனைவரும் திரும்பக் கூறினர். வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் சாலைகள், கடைகள், ஊர் மற்றும் இந்தியாவே சுத்தமாக மாறி விடும். விருதுநகர் மாவட்டம் நூறு சதவீதம் சுத்தமாக உள்ளது என யதார்த்தத்திற்குப் புறம்பான பொய்யைக் கூறினார். அனைவரும் கையில் உள்ள நகங்களை வெட்ட வேண்டும்.தனி நபர் கழிப்பறை கட்டிப் பயன்படுத்த வேண்டும். சோப்பு போட்டு கையைக் கழுவ வேண்டும் என்றும் கூறினார்.தேசபந்து மைதானத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களும் ஆளுநரிடம் கேள்வி கேட்க முயற்சித்தனர். ஆனால், அவர் ஆங்கிலத்தில் ‘நோ, நோ’ எனக் கூறிவிட்டார். மொத்தத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் வருகை முழுநீள காமெடி திரைப்படம் போல அமைந்திருந்தது.

-நமது நிருபர்

Leave a Reply

You must be logged in to post a comment.