திருப்பூர்,
அரசு பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தை பொதுமக்கள் வியாழனன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையத்தை அடுத்த கணியாம்பூண்டி கிணத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் மயிலாத்தாள் (வயது 54). இவர் திருப்பூர் காலேஜ் ரோடு ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவன மெஸ்சில் சமையல் வேலை செய்து வருகிறார். இதற்காக இவர் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பூரில் இருந்து கணியாம்பூண்டிக்கு செல்லும் 25-ம் நம்பர் அரசு பேருந்தில் சென்று வருவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல சமையல் வேலையை முடித்து விட்டு மதியம் வீட்டிற்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த அரசு பேருந்தை மறித்துள்ளார். அப்போது பேருந்து நிறுத்தாமல் சென்றதால், அந்தப் பகுதி மக்கள் கூச்சல் போட்டு நிறுத்தி மயிலாத்தாளை பேருந்தில் ஏற்றி விட்டதாக கூறப்படுகிறது.பேருந்தில் ஏறியதும் ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன், மயிலாத்தாளை கடுமையான வார்த்தையால் பேசியதாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 30 ந் தேதி மாலை மயிலாத்தாள் அதே பேருந்தில் கணியாம்பூண்டியில் ஏறி உள்ளார். பேருந்து ரங்கநாதபுரம் வந்ததும் மயிலாத்தாள் பேருந்தியிருந்து இறங்குவதற்கு படிக்கட்டிற்கு வந்தபோது,ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் பேருந்தை எடுத்துள்ளார். இதை தட்டி கேட்ட மயிலாத்தாளை மீண்டும் கோபாலகிருஷ்ணன் தகாத வார்த்தையால் திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மயிலாத்தாள் மற்றும் உறவினர்கள் கடந்த 8-ந்தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் மேலாளர் மற்றும் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், 3 நாட்கள் ஆகியும் கோபாலகிருஷ்ணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வியாழனன்று மாலை மயிலாத்தாள் மற்றும் அவருடைய உறவினர்கள் மற்றும் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  இதையடுத்து அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மணி அரசு பேருந்து ஓட்டுநர் கோபால கிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினார். அவருக்கு ஆதரவாக ஒரு சில ஓட்டுநர்களும், நடத்துநர்களும் அங்கு வந்தனர். அப்போது இருதரப்பினரும் 4 மணி நேரமாக தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார்கள்.

பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு ஆய்வாளர் சண்முகம் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் இனி இதுபோன்று சம்பவம் நடக்காது என்று உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நீண்ட நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.