கோவை,
ஏழவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமலாக்கக்கோரி கோவையில் சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு இதுவரை ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலாக்கி ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், வாரியத்தின் சொந்த நிதியில் இருந்து அதனை நடைமுறைப்படுத்திக் கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் கட்டணமாக இதுவரை ரூ.500 கோடி வரை பாக்கி வைத்துள்ளது. இதில் கோவை மாநகராட்சி மட்டும் ரூ.210 கோடி பாக்கி வைத்துள்ளது. ஆகவே குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை பாக்கிகளை உடனடியாக வசூல் செய்ய வேண்டும். இந்நிதியின் மூலம் வடிகால் வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பாரதிபார்க் பகுதியிலுள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு தமிழ்நாடு வாட்டர் சப்ளை அண்டு ட்ரெனினேஜ் போர்டு வொர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் உதவித் தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆர்.சரவணன், பொருளாளர் கே.ஆர்.ராஜேந்திரன், சம்மேளன முன்னாள் தலைவர் பாலகுமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். முடிவில் உதவி செயலாளர் பெலிக்ஸ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.