பொள்ளாச்சி,
கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சட்டக்கூலியாக ரூ.400 வழங்கிட வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகாவின் மாநாடு வியாழனன்று தாலுகா தலைவர் பி.எஸ்.சென்னியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வி.சுப்ரமணி துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் பி.முருகேசன் மற்றும் எஸ்.சித்ரா ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர்.இம்மாநாட்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். சட்டக்கூலியாக ரூ.400 வழங்க வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும், உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டையினை அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள கூலித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, இம்மாநாட்டில் தாலுகா தலைவராக பி.ஆனந்தராஜ், செயலாளராக பி.முருகேசன், பொருளாளராக கே.மகாலிங்கம் மற்றும் 16 பேர் கொண்ட புதிய தாலுகா குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், கோவை மாவட்ட செயலாளர் பி.திருமலைசாமி மாநாட்டினை நிறைவு செய்து உரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.