திருப்பூர்,
திருப்பூரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லாரி, வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில், ஆபத்தான வகையில் இரும்பு கம்பிகள் மற்றும் மரக்கட்டைகள் ஏற்றிச் செல்லப்படுகிறது. இதனால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

திருப்பூர் தொழில் நகரம் என்பதால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் போது, சரக்குகளின் தன்மையை பொறுத்து, இவற்றின் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. வாடகை அதிகமாகும் என்பதற்காக, சரக்கு வாகனத்தில் நிர்ணயிக்கப்பட்டதைவிட, அளவுக்கதிகமாக பாரம் ஏற்றிச் செல்கின்றனர். இதனால், வாகனம்கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சாலையில் செல்வோரும் விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும், தொழிற்சாலைகளுக்கு சிறிய வாகனங்களில், பனியன் துணிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும் போது, சாலையை மறைத்துக் கொண்டு, எதிரே வரும் வாகனங்களுக்கு வழி தெரியாமல் விபத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றுவதோடு, ஆபத்தான பொருட்களை ஏற்றுவது என பல விதி மீறல்கள் நடந்து வருகின்றன. பெரிய மரத்துண்டுகள், கூர்மையான கம்பிகள், மூங்கில்கள் ஆகியவற்றை எவ்வித பாதுகாப்பும் இன்றி, கயிறுகள் கொண்டு சரியாக கட்டாமல் ஏற்றிச்செல்கின்றனர். பெரும்பாலான வாகனங்களின் பின்னால் முறையான சிவப்பு நிற துணி மற்றும் சிவப்பு விளக்கோ இல்லாமல் செல்லுகின்றன.

மேலும்,நெரிசல் மிக்க சாலைகளில் செல்லும் போது ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால், பாரம் ஏற்றப்பட்டுள்ள பொருட்கள் சரிந்து, ரோட்டில் செல்லும் பொது மக்களின் மீது விழும் அபாயம் உள்ளது. இது எத்தகைய அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் என்பதை கூட சரக்கு வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நினைத்து பார்ப்பதில்லை. இதை கண்காணித்து கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் இதை கண்டும் காணாமல் விட்டு வருகின்றனர். ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: