மேட்டுப்பாளையம்,
காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய கருவிகளை வனத்தையொட்டியுள்ள கிராம எல்லைகளில் பொருத்தும் பணியினை வனத்துறை துவங்கியுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், காரமடை, சிறுமுகை போன்ற பகுதிகளில் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விடும் காட்டு யானைகளால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பயிர்கள் அழிக்கப்படுவதோடு எதிர்படும் மனிதர்களும் யானைகளால் தாக்கப்படுகின்றனர். குறிப்பாக, வன எல்லையை யொட்டியுள்ள புதர்காட்டில் மறைந்திருக்கும் யானைகள் எந்த நேரத்தில், எந்த வழியில், எத்தனை யானைகள் உள்ளே நுழையும் என அறிய முடியாத காரணத்தினால் அப்பகுதி கிராம மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வனத்தை யொட்டியுள்ள ராயர் ஊத்துப்பதி என்னும் கிராமத்தில் உயரமான ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் வனத்துறையினரால் “ELEPHANT ALERT ” என்றழைக்கப்படும் புதிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியின் உச்சியில் சிகப்பு மின் விளக்கு மற்றும் சப்தம் எழுப்பும் சைரனும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தை சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன் எண்களை பதிவு செய்வதற்கான சிம் கார்டும் உள்ளது.வனத்தைவிட்டு யானைகள் வெளியேறிய தகவல் கிடைத்தவுடன் வனத்துறையினர் செல்போன் மூலம் இக்கருவியை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கலாம். அதாவது, இக்கருவியை தொடர்பு கொண்டு ஒரே ஒரு ரிங் விடுவார்கள். இதற்கு அடுத்த நொடியே மேலே உள்ள சிகப்பு விளக்கு எரிவதோடு மூன்று கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சப்தம் கேட்கும் அளவிற்கு சைரனும் பலத்த ஒலி எழுப்பும். இதனையடுத்து ஊர் மக்கள் தங்களது பகுதியில் யானைகள் நடமாட்டத்தை உறுதிபடுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கலாம். வெளியில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடலாம். இக்கருவியில் மின்தடை ஏற்பட்டால் தானாக பேட்டெரி மூலம் இயங்கும் வசதியும் உள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரின் இம்முயற்சி பொதுமக்களின் வரவேற்பையும், நல்ல பலனும் அளித்துள்ளது. இதையடுத்து இதுபோன்ற கருவிகளை மலையோர கிராமங்களில் மொத்தம் 47 இடங்களில் பொருத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது போன்ற முன்னெச்சரிக்கை கருவிகளை யானைகளால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பொருத்த கோவை மாவட்ட வனத்துறை முன்வர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இரா.சரவணபாபு.

Leave a Reply

You must be logged in to post a comment.