பனாஜி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், வரித் தீவிரவாதம் அரங்கேறிக் கொண்டிருப்பதாக, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யஷ்வந்த் சின்ஹா பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:                                      நாங்கள் (பாஜக) கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரி தீவிரவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டினோம். தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரி தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று வாக்குறுதியும் அளித்தோம். ஆனால் அதற்கு மாறாக தற்போது வரி தீவிரவாதம் தொடர்பாக நாள்தோறும் புதுப்புது உத்தரவுகள் வருகின்றன.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை குறித்து நீதிமன்றத்தில் 20 லட்சம் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தபிறகு இதுவரை 357 திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.

இதைப் பார்க்கையில், நமது நாட்டின் வரி விதிப்பு முறையும், அதை பின்பற்ற சொல்லும் உத்தரவுகளும் நகைப்புக்குரியதாகவே இருக்கின்றன. அதாவது மின்சாரம் இல்லாத கிராமத்தை சேர்ந்த வியாபாரிகளிடம், வருமான வரிக் கணக்கு இணையதளம் மூலம் தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறது. அவர்கள் எப்படி அதை செய்ய முடியும்?1975-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதனால் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அரசியல் ரீதியில் இந்த முடிவை இந்திராகாந்தி எடுத்தார். ஆனால் தற்போது நாம் எதிர்கொண்டு வரும் நெருக்கடி நிலையானது அறிவிக்கப்படாத ஒன்றாக உள்ளது. இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் நமது நாட்டின் அரசியல் முறையில் மெதுவாக கொல்லும் வி‌ஷம் செலுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.