சேலம்,
தமிழக முதல்வரின் தொகுதியில் தொடரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமுஎகச, மாதர், வாலிபர் சங்கத்தின் சார்பில் ஜலகண்டாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் ஜலகண்டாபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடப்பதை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம், இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம் அருகில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இந்த தொகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 பெண் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்கள் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் ஆவார்கள்.

இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் குற்றங்களை கண்டித்தும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் புதனன்று ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கோகிலா தலைமை வைகித்தார். மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டீனா, மாவட்ட தலைவர் பரமேஷ்வரி, மாவட்டச் செயலாளர் ஞானசௌந்தரி, வட்டப் பொருளாளர் ஜெயலட்சுமி, வாலிபர் சங்கத்தின் ஒன்றியக் குழு அமைப்பாளர் எம்.வெங்கடேஸ், தமுஎகசவின் நிறைமதி, மேவை. சண்முகராஜா மற்றும் பொதுமக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: