கோவை மாநகரை அடுத்துள்ள குனியமுத்தூர், கோவைப்பதூர் மற்றும் பேரூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது பேரூர் ஏரி. சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியினால் சுற்றுவட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்த காணப்பட்டதுடன், ஏரியின் நீரை விவசாயத்திற்கு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்லும் பசுமை குடியலாக இந்த ஏரி திகழ்ந்து வந்தது. குறிப்பாக, பறவைகளின் இனப்பெருக்க காலத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து இனப்பெருக்கம் முடிந்தவுடன் திரும்பிச் செல்லும்.

இதனால் இந்த ஏரி முழுவதும் புள்ளிமூக்குவாத்து, சாம்பல்நாரை, சிறிய நீர்காகம், சிறிய முக்குளிப்பான், சென்நாரை, நத்தைகுத்தி நாரை, ஜொலிக்கும் அரிவாள் மூக்கன், மஞ்சள்மூக்கு நாரை, புள்ளிஅலகு கூழைகடா, பாம்புதாரா, பெரியகொக்கு, நாமக்கோழி போன்ற பறவைகள் நிறைந்து காணப்படும். இதனை கண்டு ரசிக்கவே சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளுடன் நாள்தோறும் வருகை புரிவார்கள். இதுமட்டுமின்றி வனஉயிரின ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரும், புகைப்பட கலைஞர்களும் நாள்தோறும் வந்து பறவைகள் குறித்தான தங்களது ஆய்வை மேற்கொள்வர். இதன்காரணமாக பேரூர் ஏரியை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்தது.

இந்த ஏரிக்கு பிரதான நீர்வரத்தான சித்திரைச்சாவடி அணைகட்டிலிருந்து ஏழு பாலம் வாய்க்கால் வழியாகவும், மழைக்காலங்களில் சாரப்பண்ணை வாய்க்கால் வழியாகவும் நீர் வழிந்தோடி வரும். ஆனால், தற்போது இந்த ஏரியின் நீர் வழியான ஆக்கிரமிப்பாளர்களால் முற்றிலும் அடைபட்டுள்ளது. இதனால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பேரூர் ஏரி நீர் வரத்தின்றி வறண்ட பாலைவனமாக காட்சியளிக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழையின் நீரையும் ஏரியிலுள்ள கருவேல மரங்கள்அட்டைபோல் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் கோடைகாலங்களில் இனப்பெருக்கத்திற்காக வரும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகள் புதிய பாலைவனமான பேரூர் ஏரியின் நிலையை கண்டு பரிதாபமாக திரும்பிச் செல்கின்றன. அதேநேரம், பாலைவனமாக்கப்பட்ட இந்த ஏரியை பாதுகாக்க வேண்டிய அரசு நிர்வாகமோ அங்குள்ள வண்டல் மண்களை அங்கிருந்து லாரி, லாரியாய் கடத்தி செல்ல அனுமதியளித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

-க.பிரபாகரன்.

Leave a Reply

You must be logged in to post a comment.