மேட்டுப்பாளையம்,
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை வழியாக மதுரைக்கு இயக்குவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சேலம் கோட்ட மேலாளர் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும் நடைபாதை விரிவாக்க பணிகள் மற்றும் நீலகிரி மலை ரயிலின் இயக்கம் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் புதனன்று ஆய்வு நடத்தினார். இதன்பின் மலைரயில் கண்காட்சியகம் மற்றும் ரயில்வே பணிமனைகளை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுற்றுலா திட்டங்களுக்கு ரயில்வே துறை முன்னுரிமை கொடுத்து பயணிகளின் வசதிக்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயிலுக்கு கூடுதலாக ஒரு என்ஜினும், பதினைந்து புதிய பெட்டிகளும் தயாராகி வருகிறது.தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு இங்கிருந்து இயக்கப்படும் கூடுதல் மலை ரயிலின் கட்டணம் அதிகம் என்ற கருத்து உள்ள போதிலும் சிறப்பு ரயிலுக்கு இக்கட்டண உயர்வை தவிர்க்க இயலாது என்றார்.

மேலும், மேட்டுப்பாளையம் முதல் சென்னை வரை தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை விரிவாக்க திட்டம் உள்ளது. அதாவது, இந்த ரயிலானது முதல் நாள் இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 6 மணிக்குள் மேட்டுப்பாளையம் வந்தடையும். இதன்பின் இரவு 7.45 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கி புறப்படும் வரை ரயில் நிறுத்தி வைக்கப்படும். ஆகவே, இந்த இடைப்பட்ட நேரத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை வழியாக மதுரை வரை இயக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.