சிஐடியு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்கும் காக்கிச்சட்டை பேரணி வெள்ளியன்று கோவையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டை வெற்றிகரமாக்கிட ஆட்டோ தொழிலாளர்கள் பெரும் உற்சாகமாய் பல்வேறு பணியை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மாநாட்டை விளம்பரப்படுத்தும் வகையில் நகரத்தின் முக்கிய பகுதிகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வண்ணமயமான சுவர் பிரச்சாரங்கள், பிளக்ஸ் பேனர்கள் கட்டியுள்ளனர். மாவட்டத்தில் இயங்கும் பெரும் பகுதி ஆட்டோக்களில் மாநாட்டு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. திரும்பும் திசையெல்லாம் ஆட்டோ சங்கத்தின் மாநாட்டு செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற உணர்வு சிஐடியு ஆட்டோ சங்க தொழிலாளர்களிடம் பிரதிபலித்திருப்பது கண்கூடாக தெரிகிறது.

இதுகுறித்து சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் எம்.கே.முத்துக்குமார் கூறுகையில், ஆட்டோ ஓட்டுநர் என்றாலே ஆபத்தானவன் என்கிற கட்டமைப்பை திட்டமிட்டு சிலர் உருவாக்கி வைத்திருந்தனர். எந்த அரசியல் கட்சியும் ஆட்டோ ஓட்டுனர்களை சங்கமாக சேர்த்துவதற்குகூட தயாரில்லாத நிலையில், முதன் முதலில் சிஐடியு சங்கமே ஆட்டோ தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சங்கம் அமைத்தது. உழைப்பாளி மக்களின் உரிமைக்காய் தொடர்ந்து தியாகம் செய்கிற அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்குகிற செங்கொடி இயக்கத்தின் மீது எப்போதும் பொதுமக்களிடம் பேராதரவும் பெறும் மரியாதையும் உண்டு. அத்தகைய பாரம்பரியமிக்க சங்கம், ஆட்டோ தொழிலாளர்களை திரட்டி சங்கமாக அமைத்தபிறகு ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியது. இதன் பிறகே மற்ற அரசியல் கட்சிகள் ஆட்டோ சங்கத்தை உருவாக்க துணிவை ஏற்படுத்தியது. ஆட்டோ தொழிலாளர்கள் கௌரவமான தொழிலாளர்களாக மதிக்க சிஐடியு சங்கமே காரணம்.

அத்தகைய ஆட்டோ சங்கத்தைமாநிலச் சங்கமாக தோற்றுவிக்க காரணமாக இருந்தது கோவை மண்ணில், இரண்டாவது முறையாக மாநில மாநாடு நடைபெறு
கிறது. ஆகவே ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் தன் வீட்டு குடும்ப விழா நடைபெறுகிறது என்கிற உணர்வோடு இம்மாநாட்டு பணிகளில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றுகின்றனர். இதன்காரணமாக கோவை மாநகரில் பார்க்கும் இடமெல்லாம் வண்ணமயமான சுவர் விளம்பரங்களாக காட்சியளிக்கிறது. இவ்வாறு அவர்கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.