கோவை,
கோவை பூமார்க்கெட்டில் பணியாற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சிஐடியு சங்கத்தின் தலைமையில் கோவை மாவட்ட மலர் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிற பூக்களை மொத்தமாக வியாபாரிகள் வாங்கி சில்லரை விற்பனை செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கடைகள் உள்ள இந்த மார்க்கெட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பூ கட்டுதல், மாலை சுற்றுதல், சுமை தூக்குதல், திருமண ஆர்டர்களை பெற்று விநியோகம் செய்தல் ஆகிய பணிகளில் இத்தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அரசின் எவ்வித சட்ட சலுகைகளும் கிடைக்கப்பெறாத நிலையில் இத்தொழிலாளர்கள் உள்ளனர். உதிரித்தொழிலாளர்களான இவர்கள் தற்போது சிஐடியு தலைமையில் கோவை மாவட்ட மலர் தொழிலாளர் தலைமை சங்கத்தை அரசு பதிவு பெற்று அமைத்துள்ளனர். இதன் துவக்கவிழா வியாழனன்று நடைபெற்றது. பூ மார்க்கெட் அருகில் நடைபெற்ற இவ்விழாவிற்கு சிஐடியு சுமைப்பணி சங்கத்தின்பொதுச்செயலாளர் எம்.ஏ.பாபு தலைமை தாங்கினார். சங்கக் கொடியை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஏற்றிவைத்தார். பெயர் பலகையை சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம் திறந்து வைத்தார்.முன்னதாக, வந்தனா மஹாலில் சங்க உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் பங்கேற்று சங்க அட்டை வழங்கினார். இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் (பொ) எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் என்.செல்வராஜ், ராஜன், பீர்முகம்மது மற்றும் மலர் தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான ஏ.எம்.செல்லா, ஏ.கண்ணன், ஏ.கே.அனிபா, டவுன்ஹால் ஏ.எஸ்.பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.