தஞ்சாவூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தஞ்சாவூரில் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு வருகிற 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. ஆனாலும் அன்று தமிழகம் எதிர்பார்க்கிற அதிகாரம் கொண்ட மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா என்பது சந்தேகம் தான். மத்திய அரசை பொறுத்த வரை கர்நாடகா தேர்தல் என்பது ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டிற்கு காவிரி பிரச்சினையில், நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்பது தான் உண்மை.

இதே போன்று கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அறிவித்த போது, அன்று ஏற்றுக்கொண்டு அடுத்த நான்கு தினங்களில், மேலாண்மை வாரியம் அமைப்பது எங்களால் முடியாது என மறுத்துவிட்டது. எனவே வரும் 14 ஆம் தேதி மத்திய அரசு ஏமாற்றும் வகையில் நடந்து கொள்ளும் அல்லது பெயரளவிற்கு ஒரு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில், அதிகாரம் கொண்ட மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வழக்கு தொடுத்ததுபோல தற்போது தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இதில் தமிழக அரசு நீதிமன்றத்தில் உரிய முறையில் சட்டப் போராட்டம் நடத்தாமல் விட்டு விட்டால், தமிழகத்தின் உரிமையை காலம் காலமாக இழக்க நேரிடும்.

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இணங்கிச் செல்வது கவலையான ஒன்றாக உள்ளது. இன்றைக்கு தமிழக மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை பொய்த்து போகிற அளவிற்கு தான் செயல்பாடுகள் உள்ளன. மத்திய அரசு தொடர்ந்து வாய்தா கேட்கும் நேரத்தில், உச்சநீதிமன்றம் அதைதொடர்ந்து வழங்க வேண்டிய கட்டாயம் என்ன உள்ளது.
ஸ்கீம் தயாரிக்க மோடி அரசு கர்நாடக தேர்தலை காரணம் காட்டி வருகிறது என்றால், மத்திய அரசு இல்லாமல் போய் விட்டதா அல்லது மத்திய அரசு வேறு பிரச்சனைகளில் தலையிடாமல் உள்ளதா, இப்படி மத்திய அரசு சொல்லுகிறது என்றால், இது மத்திய அரசுக்கே அவப்பெயர் தான். இப்படியாக ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தை நீதிமன்றத்தில் ஏன் சொல்லுகிறார்கள் என்பது தெரியவில்லை.

தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக சொல்லி, தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்து விட்டார்கள். இந்த இணக்கம் தமிழக ஆட்சியாளர்களை பாதுகாக்க வேண்டுமானால் பயன்படும். ஆனால் தமிழகத்திற்கான திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து பெற இவர்களின் இணக்கம் பயன்படவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் 14ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் ஏற்றுக்கொள்ளும், நல்ல தீர்ப்பு வராவிட்டால், மீண்டும் சென்னையில் 15ம் தேதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசித்து, தமிழகத்தில் மிகப் பெரிய அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.

வேறு வேறு வார்த்தைகள்
நீட் தேர்வை பொறுத்த வரையில், கேள்வித் தாளில் வந்துள்ள வார்த்தைகளும், மாணவர்களுக்கு தமிழகத்தில் பாடப் புத்தங்களில் சொல்லி தருகிற வார்த்தைகளும் வேறுவேறாக உள்ளதால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறும் போது, மத்திய அரசு ஏன் நீட் தேர்வை வலிந்து திணிக்க வேண்டும்? தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதற்கான வழியும் சட்டத்தில் உள்ளது. தமிழக அரசு மத்திய அரசுக்கு சட்டம் இயற்றி அனுப்பி 15 மாதங்கள் ஆகியும் இன்னும் மத்திய அரசு, குடியரசுத் தலைவர் பார்வைக்கு அதை அனுப்பவில்லை என சொல்லுகிறார்கள். கேட்டால் தமிழக அரசு அனுப்பிய கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்கின்றனர். மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகள் மாநில அரசின் உரிமையை நசுக்குவதாக உள்ளது.

கூட்டுறவு முடங்கும் அபாயம்
கூட்டுறவு தேர்தல் மோசடி தேர்தலாக போய் விட்டது. அதிமுக அரசு கூட்டுறவு தேர்தலை முழுமையாக எங்கும் நடத்த விடவில்லை. எதிர்க்கட்சிகளின் வேட்புமனுவை நிராகரிப்பு செய்து விட்டார்கள். இதனால் கூட்டுறவு அமைப்பு செயல்படாமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பயன் இல்லாமல் போகும். ‘அதிக பலம் கொண்டதாக அதிமுக, இருக்கிறது’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வரும் நிலையில், பயம் இல்லாமல் கூட்டுறவு சங்கத் தேர்தலையும், உள்ளாட்சி தேர்தலையும் அறிவிக்க வேண்டியது தானே ? வார்டு வரையறையில் ஏற்பட்ட குளறுபடிக்கு திமுக வழக்கு போட்டது. அது தற்போது முடிந்து விட்ட நிலையில், வார்டு வரையறை செய்ய வேண்டும் என ஒராண்டாக நீதிமன்றத்தில் அவகாசம் வேண்டுமென எதற்காக தமிழக அரசு கேட்கிறது. தோல்வி பயம் தான் காரணமாக இருக்க முடியும்.

தற்போது உள்ளாட்சிகள் அதிகாரிகளின் கொள்ளை கூடாரமாக மாறிவிட்டது.
பல கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லை. ஆனால் தற்போது உள்ளாட்சிகளில் பல புதிய வரிகளை போட்டு வசூல் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அரசுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது? உள்ளாட்சி தேர்தலை அதிமுக.அரசு நடத்தாமல் காலம் கடத்துவது நியாயம் இல்லை.

தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் நீர்நிலைகளை முறையாக பாரமாரிக்க எந்த திட்டத்தையும் தமிழக அரசு செய்யவில்லை. குட்கா வழக்கு மட்டும் இல்லாமல்,பல அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் உச்சநீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. குட்கா விவகாரத்தில் பாஜக வை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நிர்மலா தேவி உரையாடல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருந்த ஒன்று தான், தற்போது வெளிப்பட்டு உள்ளது. இதில் திடீர் என கவர்னர் விசாரிக்க அதிகாரம் கொடுத்தது யார் என தெரியவில்லை. அவ்வாறு விசாரணை நடத்தினாலும் கவர்னர் யாரையும் கைது செய்ய முடியுமா ? ஆட்சியில் உள்ளவர்களும் அச்சப்படுகிறார்கள். அவ்வாறு பயம் இல்லாவிட்டால், சிறப்பு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை குற்றசாட்டுக்கு உள்ளான கவர்னர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் பதவி விலக வேண்டும். ஆனால் சி.பி.சி.ஐ.,டி விசாரணை என்கிற பெயரில் இரண்டு பேராசிரியர்களுடன் வழக்கை முடித்துக்கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு வரும் 24 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின் போது, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாமி.நடராஜன், பி.செந்தில்குமார், மாநகரக்குழு உறுப்பினர் அப்துல் நசீர் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.