புதுக்கோட்டை :                                                                                                                                                                       நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும், வேறு இடத்தை ஒதுக்கித் தரும்படியும் அறிவித்துள்ள ஜெம் நிறுவனத்தின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்ப்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தின்படி கடந்த ஆண்டு பிப்ரவரி 15 அன்று அறிவிப்பு வெளியானது.

இதனைத்தொடந்து 16 ந் தேதி முதல் 22 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதிமொழியை ஏற்று பேராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு, ஜெம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் ஏப்ரல் 12 ந் தேதி 2 ம் கட்ட போராட்டம் தொடங்கி 174 நாட்கள் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய மாணவர், வாலிபர் சங்கத்தினர் உட்பட 62 பேர்மீது கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜெம் நிறுவனம் விலகல் கடிதம்:
இந்நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வருடம் கடந்த நிலையில் நெடுவாசல் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள ஜெம் நிறுவனம் நெடுவாசல் கிராமத்திற்குள் சென்று எந்த பணிகளும் செய்வதற்கு அப்பகுதி விவசாயிகள் அனுமதிக்கவில்லை. ஜெம் நிறுவனத்தால் நெடுவாசலுக்கே வரமுடியவில்லை. இந்நிலையில் ஜெம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டெல்லியில் கூறும் போது.

நெடுவாசல் திட்டம் செயல்படுத்துவதற்காக சம்மந்தப்பட்ட நிலங்களை எங்கள் நிறுவனப் பெயருக்கு மாற்றித்தரக் கோரி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல முறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. ஜெம் நிறுவனம் என்பது லாப நோக்கம் கொண்ட வியாபார நிறுவனம் தான். ஆனால் ஒரு வருடங்களுக்கு மேலாக சம்மந்தப்பட்ட நிலம் மாற்றிக் கொடுக்காததால் பணியை தொடங்க முடியாமல் இழப்பு எற்பட்டுள்ளது. அதனால் நெடுவாசல் திட்டத்திற்கு பதிலாக மாற்று இடம் வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

விவசாயிகள் மகிழ்ச்சி:
இந்த அறிவிப்பு பத்திரிக்கையில் வெளிவந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் கூடிய நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் ஜெம் நிறுவனம் நெடுவாசல் திட்டத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

மேலும் நெடுவாசலைக் காக்க போராடிய விவசாயிகள், அரசியல் கட்சிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மாணவர்கள், திரைதுறையினருக்கு நன்றி சொல்வதுடன், இந்த திட்டத்தை ஒப்பந்தம் செய்த நிறுவனமே வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் மத்திய அரசு முழுமையாக இந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கு மாநில அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த எந்த ஊரிலும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

திட்டத்தை ரத்துசெய்ய சிபிஎம் வலியுறுத்தல்
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனமே நெடுவாசலில் செயல்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்யப்டுவதாக அறிவிக்க வேண்டும். மாநில அரசும் இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மீண்டும் போராட்டக்களத்திற்கு மக்களை இழுத்துவரமாக பார்க்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: