கோவை,
ஆட்டோ சங்க மாநில மாநாட்டு கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோவையில் செவ்வாயன்று மாநகரம் முழுவதும் ஆட்டோ சங்கத்தின் சார்பில் வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

சிஐடியு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 8 ஆவது மாநில மாநாடு கோவையில் மே 11 ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் முதல் நிகழ்வாக மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மே 11 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. இந்நிலையில் மாநில மாநாட்டின் நோக்கம் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோவை மாநகரம் முழுவதும் செவ்வாயன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ சங்க கிழக்கு நகரக்குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். செல்வராஜ் தலைமை தாங்கினார். கோவை காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் முன்பிருந்து துவங்கிய வாகன பிரச்சார இயக்கத்தை மாநில பொதுச்செயலாளர் எம்.சிவாஜி துவக்கி வைத்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து இப்பிரச்சார இயக்கம் லஷ்மி காம்பிளக்ஸ், ரயில்நிலையம், மத்திய பேருந்து நிலையம், சுங்கம், புலியகுளம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மேற்கொண்டு பழையூர் பகுதியில் நிறைவடைந்தது.

இந்த பிரச்சார இயக்கத்தில் சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் (பொ) எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் இரா.செல்வம், பொதுச்செயலாளர் பி.கே.சுகுமாறன், பொருளாளர் சி.ராஜன், கிழக்கு நகர நிர்வாகிகள் ஏ.மாணிக்கவாசகம், தா.நாகராஜ், மைக்கில் சாமி உள்ளிட்டோர் பங்கேற்று மாநாட்டு நோக்கங்களை விளக்கி உரையாற்றினர். இந்த வாகன பிரச்சார இயக்கத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் ஏரளமானோர் பங்கேற்றனர்.முன்னதாக, ஆட்டோ சங்க பிரச்சாரம் நடைபெறும் மையங்களில் எல்லாம் சிஐடியு ஆட்டோ சங்க ஸ்டேண்டு கிளைகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மாநில மாநாட்டை வெற்றிகரமாக்கும் வகையில் நிதியை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.