ஈரோடு,
ஈரோட்டில் மூடப்பட்ட ரயில்வே பள்ளியை திறக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் பணியாற்றி வரும் ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக தொடங்கப்பட்ட ரயில்வே பள்ளிகள் நாடு முழுவதும் உள்ளன. தெற்கு ரயில்வேயில் மொத்தம் 9 ரயில்வே பள்ளிகள் உள்ளன. அதில் ஒரு பள்ளி கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருக்கிறது. மற்ற 8 பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன. சென்னையில் பெரம்பூர், திருச்சியில் பொன்மலை, கோவையில் போத்தனூர் மற்றும் மதுரை, விழுப்புரம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், ஈரோடு ஆகிய இடங்களில் இயங்கி வரும் பள்ளிகளில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும், 220 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட சுமார் 300 பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இதில் ஈரோடு பள்ளி கடந்த 1916 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, கிட்டதட்ட 102 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கு எந்த மாணவர் சேர்க்கையும் நடத்தக் கூடாது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இப்பள்ளியை நம்பியுள்ள மாணவர்களின் படிப்பு கேள்வி குறியாகும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே, இந்த முடிவை தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்து மீண்டும் பள்ளிகளை தொடர்ந்து நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொது நலஅமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ரயில்வே பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: