திண்டுக்கல்,
முதலாளித்துவம் இருக்கும் வரை வறுமை இருக்கும். வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் பொதுவுடமைச்சமூகம் மலரவேண்டும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற காரல் மார்க்சின் 200வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது.  வறண்ட பூமிக்கு மழைத் துளியை போல மனித சமூகத்திற்கு உயிர்த்துளியாக விளங்கியது மார்க்சிய தத்துவம். எத்தனை தத்துவங்கள் இந்த உலகில் தோன்றினாலும் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை மார்க்சியம் தவிர எந்த தத்துவமும் சொல்லவில்லை. நெருக்கடிகளுக்கு ஏதாவது வழி கிடைக்காதா என்று ஏங்கிக்கிடக்கும் மக்களுக்கான தத்துவத்தை மார்க்ஸ் படைத்தார். இந்த உலகத்தில் புத்தர் பிறந்தார், வள்ளலார் பிறந்தார். பசிப்பிணியை போக்க உணவுச்சாலைகளை அமைத்தார்கள். ஆனால் ஏழைகளின் பசி பஞ்சம் பட்டினிக்கு முழுமையான தீர்வை உருவாக்கவில்லை. மார்க்சியம் எனும் உலகின் மகத்தான பொதுவுடமை சித்தாந்தம் தான் தீர்வை வழங்கியது.

பெரியார் வியந்த சோவியத்யூனியன்:
1930களில் பெரியார் சோவியத் யூனியனுக்குச் சென்றார். அங்கு தெருவில் பிச்சைக்காரர்களை அவரால் பார்க்க முடியவில்லை. அவருக்கு ரஷ்யா பிடித்துப்போனது. எனக்கு இந்த நாட்டின் குடியுரிமை கொடுங்கள்; நான் இங்கேயே இருந்துவிடுகிறேன் என்றார். ஆனால் சோவியத் அரசு அவருக்கு குடியுரிமை வழங்கவில்லை. உங்கள் நாட்டில் நீங்கள் இது போன்ற ஒரு சோசலிச நாட்டை உருவாக்குங்கள் என்று அனுப்பிவிட்டனர். அதன் பிறகு தமிழகத்திற்கு வந்த பெரியார் சமதர்ம மாநாடு, சாதி மறுப்பு மாநாடு என பல மாநாடுகளை நடத்தினார்.

அங்குசமதர்ம சமுதாயம் படைக்க காரணமாக இருந்தவர் காரல்மார்க்ஸ். அவர் படைத்தது தான் கம்யூனிச சித்தாந்தம்.  உலகில் அதிக அளவில் அச்சிட்டு வெளியிடப்பட்டது பைபிள். அதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஏன் பைபிளை விட அதிக அளவில் பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது கம்யூனிஸ்ட் அறிக்கை.சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் பேசும் போது, மார்க்சை பற்றி இவ்வாறு வர்ணிக்கிறார். ஒருகாலத்தில் உலகில் உள்ள புத்தகங்களையெல்லாம் மார்க்ஸ் தேடித் தேடி படித்தார். இன்றைக்கு மனிதர்கள் மார்க்சின் புத்தகங்களை தேடித்தேடி படிக்கிறார்கள் என்றார். அந்த அளவிற்கு உலகில் அனைத்து மொழி பேசும் மக்களையும் கவர்ந்தவர் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றி பிரடெரிக் ஏங்கெல்ஸ் கூறும்போது கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு நிகரான ஒரு இலக்கியம் இந்த உலகில் இல்லை என்றார்.

39 பக்கம் கொண்ட அந்த சிறிய புத்தகம், வறுமையை உற்பத்தி செய்வது முதலாளித்துவ அமைப்பு தான் என்றும், தனி உடமை இருக்கும்வரை வறுமை இருக்கும்; பொதுவுடமைச்சமூகம் அமைந்தால் தான் வறுமை ஒழிக்கப்படும் என்றும் ஆணித்தரமாக கூறியது. அவரது லட்சியத்தை நிறைவேற்றவே உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பாடுபடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அந்த திசைவழியில் பயணிக்கிறது.

வரிமேல் வரி போட்டு கசக்கிப்பிழிகிறது மோடி அரசு:
இந்தியாவில் மோடி அரசு முதலாளித்துவ பாதையில் சென்று மக்களை வஞ்சித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வருகிறது. லிட்டருக்கு ரூ.78 வரை உயர்த்தி உள்ளது. உலக சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயராத போது கூட இந்தியாவில் மோடி அரசு விலையை உயர்த்தி நடுத்தர மக்களையும், ஏழை மக்களையும் கொடுமைக்குள்ளாக்கி வருகிறது. ஜி.எஸ்.டி வரி என்ற பெயரால் மக்களிடம் அதிக அளவிலான வரிவசூல் செய்கிறது. ஹோட்டலுக்குச் சென்றால் 12 சதவீத வரியும், துணிக்கடைக்குச் சென்றால் 18 சதவீதம் வரியும் வசூலிக்கிறார்கள்.

ஆனால் வைர நகைவாங்கும் பணக்காரர்களுக்கு கால் சதவீத வரியே விதிக்கப்படுகிறது. ஒரு நாட்டில் அதிகபணம் வைத்துள்ளவர்களிடம் அதிக வரியும், ஏழை எளிய மக்களிடம் குறைவான வரியும் வசூலிப்பது தான் நடைமுறை. ஆனால் இந்தியாவில் பணக்காரர்களிடம் குறைவான வரியையும், ஏழைகளிடம் அதிக வரியையும் மோடி அரசு வசூலிக்கிறது. விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு கடன் கொடுக்க வங்கிகள் மறுக்கின்றன. கொடுத்த கடனை கெடுபிடி வசூல் செய்கின்றன. ஆனால் லலித்மோடி, நீரவ்மோடி, மல்லையா உள்ளிட்ட பலருக்கு கொடுக்கப்பட்ட வங்கிக்கடன்களை தள்ளுபடிசெய்கிறார்கள். நீரவ் மோடிக்கு 12.400 கோடிகடன் கொடுத்துள்ளார்கள். ஆனால் சாதாரணவிவசாயிக்கு கடன் தர மறுக்கிறார்கள்.

தமிழக அரசு வெட்கப்பட வேண்டாமா?
நீட் தேர்வை நடத்த தமிழகத்தில் மையம் தமைக்க முடியாதா? கேரள மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத வரும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை வரவேற்க மாவட்ட ஆட்சியர்கள் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார்கள். கேரள மாநில அரசு அதற்கான முன்னேற்பாடுகளை செய்கிறது. ஆனால் இங்கு பேருந்து வசதி கூட செய்து தரவில்லை. கேரளாவில் நீட் தேர்வு எழுதச் சென்ற தன் மகனுடன் சென்ற விவசாயிமாரடைப்பால் இறந்து போனார். தன் தந்தை இறந்து போனது கூட தெரியாமல் மாணவன் தேர்வு எழுதுகிறார். அந்த மாணவர் தேர்வு எழுதி வரும் போது தான் போலீசார் உடன் வருகிறார்கள். செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். அப்போது தான் தனது தந்தை இறந்து விட்ட செய்தி தெரியும். இது எவ்வளவு பெரிய கொடுமை.

அந்த மாணவனிடம் முதலமைச்சர் பினராயிவிஜயன் தொடர்பு கொண்டு பேசுகிறார். திருச்சூரில் உள்ள அந்த மாணவரின் உறவினர்களோடு பேசுகிறார். அந்த தகவலை நம்மிடமும் சொல்கிறார். மாணவனின் தாயிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறுகிறார். கேரள போலீசாரும் அதிகாரிகளும் இறந்து போன விவசாயியின் உடலை மாவட்ட எல்லை வரை கொண்டுவந்து அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இங்குள்ள தமிழக அரசு அது பற்றி எந்த கவலையும் இல்லாமல் உள்ளது. ஏனென்றால் நீட் தேர்வுக்கும் இவர்களுக்கும் சம்மந்த முமில்லை என்கிறா2ர்கள். இது என்ன அரசா? இவர்கள் வெட்கப்பட வேண்டாமா? இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.