பழனி;
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே செவ்வாயன்று நள்ளிரவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கேர ளாவைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கோரித்தோடு பகுதியை சேர்ந்தவர் சசி (62). இவர் தனது மனைவி விஜி (60), பேரன்கள் அபிஜித் (17), ஆதித்யன் (12), அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் (58), அவரது மனைவி லேகா (50), இவர்களது மகன் மனு (27) மற்றும் உறவினர் சஜினி (52) .இவர்கள் பழனி கோவிலுக்கு செவ்வாயன்று மாலை காரில் வந்தனர். சுரேஷ் காரை ஓட்டி வந்தார். பின்னர் கோவிலில் இருந்து செவ்வாயன்று இரவில் அவர்களது ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். திண்டுக்கல்-பழனி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலவாடம்பட்டி என்ற இடத்தில் நள்ளிரவில் 12.30 மணி யளவில் வந்து கொண்டிருந்தபோது, டயர் வெடித்து கார் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடியது. அப்போது எதிரே வந்த, பழனியில் இருந்து பெரியகுளம் தென்கரைக்கு பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது கார் மோதியது.இதில் கார், லாரிக்குள் சிக்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி தீயணைப்புத்துறையினர் லாரிக்குள் சிக்கிய காரை வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் காருக்குள் சிக்கிய சசி, லேகா, சுரேஷ், மனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே அபிஜித் உயிரிழந்தார்.  மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஜி வழியிலேயே இறந்தார். பலத்தக்காய மடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சஜினியும் உயிரிழந்தார். ஆதித்யன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து லாரியை ஓட்டிவந்த பெரியகுளம் தென்கரையை சேர்ந்த அய்யப்பன் என்பவரை கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: