பாகிஸ்தானைத் தோற்றுவித்த ஜின்னா இந்தியாவில் முஸ்லீம்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று அஞ்சினார். மக்களவையில் இதுவரை இருந்ததை விட முஸ்லீம் பிரதிநிதித்துவம் குறைந்திருப்பதன் மூலம் அந்த அச்சம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

திப்பு சுல்தான், ஔரங்கசீப், இப்போது முகமது அலி ஜின்னா என்று வரலாற்றில் இருந்து இறந்து போன  முஸ்லீம்கள் நவீன இந்திய அரசியலில் ஊடுருவுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியும், ஹிந்துத்துவ குழுக்களும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் சங்கத்தின் சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்த பாகிஸ்தானைத் தோற்றுவித்த ஜின்னாவின் உருவப்படம் குறித்த பிரச்சனையை தங்கள் வசம் எடுத்துக் கொண்டன. அந்தப் படத்தை அகற்ற வேண்டும் என்று கோரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஹிந்து யுவ வாஹினி உறுப்பினர்கள் கடந்த வாரம் அந்த பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மாணவர்களுடன் மோதினர். விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். ஹிந்துத்துவ ஆர்வலர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று மாணவர்கள் வைத்த கோரிக்கை, பல்கலைக்கழகத்தில் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. சனிக்கிழமையன்று  பாஜக தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் இந்தியாவில் ஜின்னா கௌரவிக்கப்படக்கூடாது என்று அறிவித்த போது இந்த விவகாரத்தில் அரசியல் திருப்பம் ஏற்பட்டது.

திப்பு சுல்தான், அவுரங்கசீப்பைப் போல ஜின்னாவின் உருவப்பட விவகாரமும் திடீரென்று எதிர்பாராமல் தோன்றியதாகவே இருந்தது. அலிகார் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக ஜின்னா இருந்து வந்த காலத்தில் இருந்து, அந்தப் படம் ஏறத்தாழ எண்பதாண்டுகளாக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் அது இருந்த இடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. மாபெரும் பெரும்பான்மை அச்சிற்குள் இந்திய அரசியலை வார்த்து எடுப்பது, உத்தரப்பிரதேசத்திலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் முஸ்லீம்களை அரசியல் ரீதியாக ஓரங்கட்டுவது போன்ற நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட மற்றுமொரு முயற்சியாகவே இது காணப்படுகிறது.

2018இல் இந்திய அரசியலுடன் ஜின்னாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், தேர்தல் அரசியலானது இந்திய முஸ்லீம்களை நிரந்தர சிறுபான்மை நிலைமைக்குத் தள்ளி, அவர்களது மத அடையாளத்தால் அவர்களுக்கான அதிகாரத்தைக் கிடைக்காமல் செய்து விடும் என்று 1930களில் உருவாக்கப்பட்ட அவரது கோட்பாடுகளில் ஒன்றை அவரைப் பற்றிய இந்த திடீர் விமர்சனம் நியாயப்படுத்துவதாகவே இருக்கிறது.

இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கான தூதுவர்

பம்பாயின் செல்வந்தர்கள் வரிசையில் இருந்த ஜின்னா ஒரு மிதவாத காங்கிரஸ்காரராக தனது அரசியல் பணியைத் தொடங்கினார். 1916இல் லக்னோவில் முஸ்லீம்லீக்கிற்கும் காங்கிரஸுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தபோது, தன்னை ஒரு ​”குறுகிய கட்சி மனப்பான்மைக் குரல்களிடம் பரிவு காட்டாத உறுதியான காங்கிரஸ்காரன்” என்று அழைத்துக் கொண்டார். மோகன்தாஸ் காந்தியின் குருவான காங்கிரஸ் தலைவர் கோபால கிருஷ்ண கோகலேவைக் குறிக்கும் வகையில் தன்னை “முஸ்லீம் கோகலே” என்று வகைப்படுத்திக் கொண்டார். 1920ஆம் ஆண்டில், தனது மிதவாத கட்டத்தில் இருந்த ஜின்னா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தார். வெகுஜன பங்களிப்புக்கு எதிராகவும், மக்களைத் திரட்டுவதற்கு மதத்தை பயன்படுத்துவதற்கு  எதிரானவராகவும் அவர் இருந்தார். அவருடைய எதிர்ப்பு தோல்வியடைந்தபோது காங்கிரசிலிருந்து ஜின்னா விலகினார்.

ஆனாலும் ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமைக்காக அவர் தொடர்ந்து போராடினார். மத்திய சட்டமன்றத்தில் மூன்றில் ஒரு பகுதி இட ஒதுக்கீட்டிற்கான ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டு பிரிட்டிஷார் அளித்திருந்த தனி வாக்காளர் தொகுதிகளை முஸ்லீம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று 1928ஆம் ஆண்டு அவர் முன்மொழிந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் பிரதிநிதி அரசாங்கம் என்பது ஆரம்பமானதில் இருந்து முஸ்லீம் அரசியல் என்பதற்கு தனி வாக்காளர் தொகுதிகளுக்கான கோரிக்கை என்பதே அடித்தளமாக இருந்ததால், அவருடைய இந்த முன்மொழிவு மிகுந்த ஆபத்தான நடவடிக்கையாகவே இருந்தது. இருப்பினும் ஜின்னாவின் இந்த முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்தது. பம்பாயைச் சேர்ந்த தாராளவாத அரசியல்வாதியான தேஜ் பகதூர் சாப்ரு “ஒரு கால் நூற்றாண்டு காலத்திலிருந்து இந்தியா மீள முடியாத அளவிற்கு பெரும் சேதத்தை விளைவிக்கும்” என்று ஜின்னாவின் முன்மொழிவை விவரித்தார்.

ஐக்கிய மாகாணங்களில் (இன்றைய உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்) 1937ஆம் ஆண்டு நடைபெற்ற  மாநிலத் தேர்தல்களில் ஜின்னாவிற்கு மற்றுமொரு பேரிடி விழுந்தது. மாகாண அளவில் பொறுப்பான அரசாங்கத்தை ஏற்படுத்துகின்ற, வாக்களிக்கும் உரிமைகள் அனைவருக்குமானதாக இல்லாமலும், போதிய அளவில் இல்லாமலும் இருந்து நடைபெற்ற, முதல் தேர்தலாக அது இருந்தது. முஸ்லீம்களிடம் ஆதரவு இல்லை என்பதால் காங்கிரஸ் முஸ்லீம்லீகுடன் ஒரு மறைமுகமான உடன்படிக்கைக்குத் தயாரானது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த 60 இடங்களில் 9 இடங்களுக்கு மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ் அவற்றில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும், பொது இடங்களில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டு கணிசமாக வெற்றி பெற்றதன் விளைவாக. அரசாங்கத்தை அமைப்பதற்கான லீக்கின் உதவி காங்கிரசிற்குத் தேவையில்லாமல் போனது. அதையொட்டி ஆட்சி அமைப்பதற்கான சொந்த முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டது. இது ஒன்றும் அசாதாரணமானது அல்ல – எந்தக் கட்சியும் தன்னால் ஆட்சி அமைக்க முடியும் என்றால், தன்னுடைய கைகள் மற்றவர்களால் பிணைக்கப்படுவதை விரும்பாது. ஆனால் இது கிட்டத்தட்ட கஜானாவையும், எதிர்க்கட்சி வரிசையையும் ஹிந்து, முஸ்லீம்கள் என்று பிளவுபடுத்துகின்ற துரதிஷ்டவசமான விளைவாக இருந்தது. ஐக்கிய மாகாண சட்டமன்ற காங்கிரஸில் இரண்டு முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அது பெரும்பான்மைவாத அச்ச உணர்வு எழுவதற்கு காரணமானது.

நிரந்தரச் சிறுபான்மை

இந்த இரண்டு நிகழ்வுகளும் முஸ்லீம்களுக்கு அரசியலமைப்பு பாதுகாப்பைக் கோருவதைப் பற்றிய கருத்தை அடைகின்ற வகையில் ஜின்னாவை வழிநடத்தின. காங்கிரசுடன் புரிந்துணர்வு ஏற்படுவதில் தோல்வி அடைந்த நிலையில், பாதுகாப்புகள் அற்ற நிலையில் இருப்பதாக அவர் உணர்ந்தார். 1938இல் மத்திய சட்டமன்றத்தில் முஸ்லீம்லீக்குடன் பேசிய போது, நிரந்தரப் பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை பின்வருமாறு அவர் தெரிவித்தார்.

“ஏழு காங்கிரஸ் மாகாணங்களில் [1937 தேர்தலுக்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த] இருப்பது ஜனநாயகப் பெரும்பான்மை அல்ல. ஜனநாயகப் பெரும்பான்மை மூலம் அரசாங்கம் உருவாக்கப்படவில்லை எனினும் அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிரந்தர ஹிந்துப் பெரும்பான்மையானது, எந்த மாற்றத்தாலும் மாற்ற முடியாதது. இந்தப் போலியான அமைப்பு இங்கிலாந்தில் வேண்டுமானால் பயன்மிக்கதாக இருக்கலாம். ஆனால் அது இங்கே செயல்படுத்தப்படும் போது, ​​அது ஒரு தோல்வி என்பதாகவே நீங்கள் பார்க்கலாம். நிரந்தர ஹிந்துப் பெரும்பான்மையும், அமைச்சரவை என்பது ஹிந்து அமைச்சரவையாக இருப்பது மட்டுமே இதன் விளைவாக இருக்கிறது”.

1940ஆம் ஆண்டில், நிரந்தரப் பெரும்பான்மையினர் மற்றும் நிரந்தரச் சிறுபான்மையினர் என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்திய ஜின்னா, ஹிந்து மற்றும் முஸ்லீம்களுக்கிடையே அரசியல் சமத்துவம் இருப்பதாக கூறிய காந்தியின் கருத்துகளைப் பற்றி “ஒரே ஒரு வேறுபாடுதான் இருக்கிறது. சகோதரர் காந்திக்கு மூன்று வாக்குகளும், எனக்கு ஒரே ஒரு வாக்கும் இருக்கிறது” என்று ஏளனம் செய்தார்.

இரு தேசக் கோட்பாடு

பிரிட்டிஷ் இந்தியாவின் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே அரசியல் சமநிலை இருப்பதையே  இந்த நிரந்தரச் சிறுபான்மையினர் பிரச்சனைக்கான தீர்வாக ஜின்னா கொண்டார். இதை அடைவதற்கு அவர் பயன்படுத்திய இரு தேசக் கோட்பாடு என்ற உபகரணமானது அந்த நோயைக் காட்டிலும் மிகவும் மோசமானதாக இருந்தது. ’பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குள்ளாக ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஆரம்பகால நாடுகளாக இருக்க வேண்டும் – சமூகங்களாக அல்ல, இந்தியாவில் எந்த அதிகார பகிர்வு ஏற்பாடுகளும்  தேசிய சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே இருக்க வேண்டும்’ என்பதே அந்தக் கோட்பாடாக இருந்தது. அந்த இரு தேசக் கோட்பாடு மோசமானதாக இருந்தது மட்டுமல்லாமல், ஒரு தந்திரமான வெற்றியாகக் கூட இருக்கவில்லை. அந்தக் கருவி முக்கியமான 1946-1947 காலத்தில்கூட வேலை செய்யவில்லை. 1946ஆம் ஆண்டு அமைச்சரவை மிஷன் திட்டத்தில், ஒன்றுபட்ட இந்தியா என்ற பிரிட்டிஷ் திட்டத்தை-அது வெளிப்படையாக சமத்துவத்தை நிராகரித்தாலும்கூட, கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஜின்னாவிற்கு ஏற்பட்டது.

இறுதியில், காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கிற்கு இடையே உள்ள அனைத்து நம்பிக்கைகளும் சிதைந்து போன நிலையில், பலமுறை முன்கூட்டியே தன்னால் நிராகரிக்கப்பட்டிருந்த “செல்லரித்துப் போன” பாகிஸ்தான் என்பதை ஜின்னா ஏற்றுக்கொண்டார். 1947க்கு முந்தைய முப்பதாண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வங்காள தேசியவாதம் என்ற பெயரில் சிதைந்து போய் இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த முஸ்லீம்கள் இப்போது மூன்று நாடுகளில் இருப்பதாக மாறியதால், தென்னாசிய முஸ்லீம்களுக்கென்று எப்படியாவது ஒரு நாட்டை உருவாக்கி விட வேண்டுமென்ற ஜின்னாவின் திட்டம் ஓய்ந்து போனது.

ஒதுக்கப்படும் இந்திய முஸ்லீம்கள்

ஹிந்துத்துவா இந்தியாவைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்திருக்கும் இந்த வேளையில், ’இந்திய முஸ்லீம்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு அவர்கள் பெரும்பான்மை மக்களால் நிரந்தர சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்’ என்ற ஜின்னாவின் கணிப்பை மறுபரிசீலனை செய்வது அவசியமாகிறது. இப்போது பார்க்கும் போது, ஜின்னாவின் இரு தேசம் என்ற தீர்வு சரியானதாக இருந்திருக்கவில்லை என்றாலும், உண்மையான பிரச்சனையை ஜின்னா அடையாளப்படுத்தி இருந்ததாக அண்மையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தனது கட்டுரையில் ஆகார் பட்டேல் குறிப்பிட்டிருக்கிறார்.

உதாரணமாக, 545 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதாக, இதற்கு முன்பாக இருந்ததை விட மிகக் குறைவாக உள்ளது. இந்திய மக்கள்தொகையைப் பிரதிபலிக்கும் வகையில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இருந்தால், முஸ்லீம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தமுள்ள உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு சற்றுக் குறைவான அளவில் இருக்க வேண்டும். இந்த சிறிய எண்ணிக்கையும்கூட, கடந்த 25 ஆண்டுகளில் ஒரே ஒரு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரைக் கூட தேர்ந்தெடுக்காத 14 மாநிலங்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது. குஜராத்தைப் போன்ற ஒரு மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர். 404 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில், மாநில மக்கள்தொகையில் 19.2% உள்ள முஸ்லீம்கள் 5.9% மட்டுமே சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவ்வாறான புள்ளிவிவரங்கள் மோசமானதாக இருக்கின்ற நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்ளூர், மாநிலம் மற்றும் மத்திய அதிகாரங்களில் இருந்தும் முஸ்லீம்கள் துரத்தி ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் முஸ்லீம்களுக்குத் தரப்படுவதில்லை. சில சந்தர்ப்பங்களில்,  பாஜகவின் முக்கிய தலைவர்கள் தங்களுடைய கட்சிக்கு முஸ்லீம் வாக்குகளே தேவையில்லை என்று பலமுறை தெளிவாக்கி இருக்கின்றனர். இதன் விளைவாக, சட்டமன்றங்களில் கருவூலப் பெஞ்சுகளில் கிட்டத்தட்ட முஸ்லீம்களே இல்லை என்கிற நிலை உருவாகி, அந்த சமூகத்தை நிரந்தரச் சிறுபான்மையினராக நிலைநிறுத்தி இருக்கின்றது. அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதின் மூலம், முஸ்லீம்கள் பெரும்பான்மையினரின் விருப்பங்களை நம்பியிருக்கின்ற வகையில் ஆக்க்கப்பட்டுள்ளனர். மேலும், பாஜக எழுப்புகின்ற முஸ்லீம்களைத் திருப்திப்படுத்துவது என்ற குற்றச்சாட்டின் விளைவாக, ஜனநாயகத்தின் சாதாரண நடைமுறையாக உள்ள விஷயங்களில்கூட பிற கட்சிகளும் முஸ்லீம் நலன்களைப் பற்றி மிகுந்த எச்சரிக்கையுடனே இருக்கின்றன. இவ்வாறான அரசியல் ஒதுக்கல் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வளர்த்தெடுப்பதுடன், உடல்ரீதியிலான வன்முறைகளுக்கு வித்திடுகின்ற பல விளைவுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.

இத்தகைய முறையில் வறுமையில் வாடுகின்ற ஜனநாயகம் இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானதாக இருக்கவில்லை. 2009இல் முடிவடைந்த கிட்டத்தட்ட முப்பதாண்டு கால ரத்தக்களரியான உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையில் உள்ள சிங்களப் பெரும்பான்மை மக்களால் தமிழ் மக்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேற்குலகிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. 2016இல் நடைபெற்ற ஒரு  பேரணியில் அமெரிக்காவின் அதிபர் போட்டியில் இருந்த டொனால்ட் டிரம்ப் “மக்களை ஒன்றுபடுத்துவதுதான் முக்கியமான விஷயம் என்பதால் மற்றவர்களைப் பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை” என்றார். இது அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒதுக்கி வைக்கும் அரசியல், இதில் மெக்சிகர்கள் போன்ற சில சமூகங்கள் “உண்மையான அமெரிக்காவின்” ஒரு பகுதியாக இருக்க முடியாது என்று கருதப்படுவதாக ஜன்-வெர்னர் முல்லர் என்ற அரசியல் விஞ்ஞானி தெரிவிக்கிறார்.

நன்றி: https://scroll.in/article/878126/permanent-minority-did-jinnah-predict-the-political-marginalisation-of-muslims-in-todays-india

தமிழில்: தா.சந்திரகுரு, விருதுநகர்.

Leave a Reply

You must be logged in to post a comment.