சென்னை,
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்க தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணைய கூடுதல் செயலாளர் வாசுகி நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணையின்போது நல்ல நோக்கத்துக்காக துவங்கப்பட்ட கூட்டுறவு இயக்கம் தற்போது நலிவடைந்து வருகிறது எனவும் முறைகேடுகள் நடைபெறாமல் எந்த தேர்தல்களும் நடைபெறுவதில்லை எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் புதிதாக புகார் மனு அளிக்கலாம். மேலும்,  புகார்கள் மீது நேர்மையாக விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டுமெனவும் புகார் கொடுத்த 8 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்திற்க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல் முடிவை வெளியிட கூடாது. கூட்டுறவு இயக்கத்தை மீண்டும் பொலிவாக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.