நகோன்:
ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், ‘ரோடு சரி இல்லை’ என மேடையில் வெளிப்படையாக புகார் கூறியதால், அதிர்ச்சிக்கு உள்ளான மத்திய அமைச்சர் ஓடோடிச் சென்று, அந்த ஆசிரியரின் மைக்கை ஆப் செய்த சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது.

அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் ‘சுவஜ் பாரத் மிஷன்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரயில்வே இணை அமைச்சர் ராஜேன் கோஹெயின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பல அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர். பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் பேசினார்.அப்போது, சாலைகளைச் சரி செய்ய உள்ளூர் எம்.எல்.ஏ.-வுக்கு பலமுறை மனு அளித்தும் எதுவும் நடக்கவில்லை என்றும் வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்தார். அமோலபட்டியின் பி.பி. சாலை சுரங்கப்பாதை சாலை மிகவும் மோசமாக உள்ளது; இதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் புதிய அரசாங்கமும், புதிய எம்.எல்.ஏ.வும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும் பலமுறை விண்ணப்ப மனு அளித்து உள்ளேன் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரச்சனைகளை அடுக்கினார்.

இதனால், மேடையிலேயே நெளிய ஆரம்பித்த ராஜேன் கோஹெயின், ஒரு கட்டத்தில் ஆத்திரத்திற்கு உள்ளானார். வேகமாக எழுந்த அவர் விறுவிறுவென சென்று, ஓய்வுபெற்ற ஆசிரியர் பேசிக்கொண்டிருந்த மைக்கை ஆப் செய்து விட்டு, “முட்டாள் தனமாக பேசுகிறீர்கள்.. நீங்கள் இங்கு ஒரு உள் நோக்கத்துடன் வந்திருப்பதாக தோன்றுகிறது” என்று வாக்குவாதத்தல் ஈடுபட்டார். போனையும் பறித்துக் கொண்டார்.

மத்திய அமைச்சரின் இந்த ஆவேசத்தால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு, பின்னர் ஓய்ந்தது.
இதனிடையே, அமைச்சரின் செயலைக் கண்டித்து, மாணவர் அமைப்பினர் அசாமில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது கொடும்பாவியையும் எரித்தனர்.
அசாம் மாநிலத்தில், முதல்வர் சர்பானந்த சோனாவால் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

%d bloggers like this: